வழிபாடு

சாமி தரிசனம் செய்ய வரிசையில் காத்திருந்த பக்தர்களை படத்தில் காணலாம்.

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் இன்று வருஷாபிஷேக விழா: ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்

Published On 2023-06-26 03:58 GMT   |   Update On 2023-06-26 03:58 GMT
  • மதியம் சிறப்பு அன்னதானம் நடைபெறும்.
  • மாலையில் ‘லட்சதீப விழா’ நடக்கிறது.

108 வைணவத்தலங்களில் ஒன்றான திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் 418 ஆண்டுகளுக்கு பின்பு கடந்த ஆண்டு ஜூலை மாதம் 6-ந் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. தமிழ் மாதமான ஆனி மாத உத்தரம் நட்சத்திரத்தில் கும்பாபிஷேகம் நடந்ததால் அதை கணக்கில் கொண்டு, ஆனிமாத உத்தரம் நட்சத்திர நாளான இன்று (திங்கட்கிழமை) வருஷாபிஷேகம் நடக்கிறது.

இதையொட்டி நேற்று 'சாக்கியார் கூத்து' எனப்படும் நகைச்சுவை நாட்டிய நாடக நிகழ்ச்சி நடந்தது. இந்தநிகழ்ச்சி கேரளாவுடன் குமரி இணைந்திருந்த போது நடைபெற்று வந்தது. பின்னர் குமரி மாவட்டம் தமிழ்நாட்டுடன் இணைந்த பின்னர் இந்த நிகழ்ச்சி நடைபெறவில்லை. பாரம்பரியம் மிக்க இந்த கலையை தற்போது 67 ஆண்டுகளுக்கு பின்னர் திருச்சூரை சேர்ந்த கலா மண்டலம் சங்கீத் சாக்கியார் நிகழ்த்தினார்.

மேலும், வருஷாபிஷேக விழாவையொட்டி நேற்று ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

விழாவில் இன்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம் நடக்கிறது. தொடர்ந்து சாமி கருவறையில் இருந்து ஒற்றைக்கல் மண்டபத்தில் எழுந்தருளல், நவகலச அபிஷேகம், கணபதி ஹோமம் போன்றவை நடக்கிறது. தொடர்ந்து உதயமார்த்தாண்ட மண்டபத்தில் 25 கலசங்களுடன் சிறப்பு பூஜை நடக்கிறது.

பின்னர் ஆதிகேசவ பெருமாள் மற்றும் பூதேவி, ஸ்ரீதேவிக்கு 25 கலசங்களில் பூஜை செய்யப்பட்ட புனித நீரால் சிறப்பு அபிஷேகம், கிருஷ்ண சாமி, அய்யப்ப சாமி, குலசேகரப்பெருமாள் ஆகியோருக்கு நவ கலச அபிஷேகம், தீபாராதனை ஆகியன நடக்கிறது. மதியம் சிறப்பு அன்னதானம் நடைபெறும். மாலையில் அலங்கார தீபாராதனையை தொடர்ந்து கோவில் பிரகாரத்தில் உள்ள விளக்குகளுக்கு ஒளியேற்றும் 'லட்சதீப விழா' நடக்கிறது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு விளக்கேற்றுகின்றனர்.

வருஷாபிஷேகம் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினரும், பக்தர்களும் செய்துள்ளனர்.

Tags:    

Similar News