வழிபாடு

ஆதிகேசவ பெருமாளும், கிருஷ்ணசாமியும் பள்ளி வேட்டைக்காக எழுந்தருளிய போது எடுத்த படம்.

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் இன்று ஆராட்டு நடக்கிறது

Published On 2023-04-05 04:44 GMT   |   Update On 2023-04-05 04:44 GMT
  • ‘திருவிலக்கம்’ நிகழ்ச்சி இன்று காலை 11 மணிக்கு நடைபெறும்.
  • இன்று மாலை 5.30 மணிக்கு ஆராட்டு விழா நடக்கிறது.

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் பங்குனித்திருவிழா கடந்த மாதம் 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழா நாட்களில் சாமி வாகனத்தில் பவனி வருதல், ஹரிநாம கீர்த்தனம், சொற்பொழிவு, பரத நாட்டியம் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று முன்தினம் துரியோதன வதம் கதகளி நடந்தது.

விழாவின் 9-வது நாளான நேற்று மாலையில் சிறப்பு நாதஸ்வர இன்னிசை கச்சேரி நடைபெற்றது. தொடர்ந்து இரவில் கோவிலில் இருந்து கருட வாகனத்தில் ஆதிகேசவ பெருமாளும், கிருஷ்ணசாமியும், எந்தவித வாத்தியக்கருவிகளும் ஒலிக்காமல் நிசப்தமாக தளியல் சிவன் கோவில் பகுதியில் பள்ளி வேட்டைக்கு எழுந்தருளினர். தேங்காயில் அம்பு எய்யும் வேட்டை நிகழ்ச்சி முடிந்ததும் மேள தாளம் முழங்க சிவன் கோவில், கருடாழ்வார் கோவில், பஜனை மடம், தளியல் முத்தாரம்மன் கோவில், நான்குமுனை சந்திப்பு வழியாக கோவிலுக்கு திரும்பி வந்தனர்.

வேட்டை முடிந்து திரும்பி வரும்போது வீடுகளில் இருந்து பக்தர்கள் மலர்களால் சாமிகளுக்கு அபிஷேகம் செய்தனர். கோவில் உள்ளே ஆதிகேசவ பெருமாள் விக்ரகம் கொண்டு செல்லப்பட்ட பின்பு கிராதம் கதகளி நடந்தது.

விழாவில் இன்று (புதன்கிழமை) காலை கோவில் நடை தாமதமாகவே திறக்கப்படும். நேற்று வேட்டை நிகழ்ச்சி நடந்ததால் கோவிலை புனிதப் படுத்தும் 'திருவிலக்கம்' நிகழ்ச்சி காலை 11 மணிக்கு நடைபெறும். மாலை 5.30 மணிக்கு ஆதிகேசவ பெருமாளும், கிருஷ்ணசாமியும் மூவாற்று முகம் ஆற்றில் ஆராட்டு விழாவுக்கு எழுந்தருளுகின்றனர். ஆராட்டு ஊர்வலம் துப்பாக்கி ஏந்திய போலீசார் மரியாதை செய்ய, திருவிதாங்கூர் ராஜ பிரதிநிதி முன் செல்ல ஆற்றூர், தோட்டவாரம் வழியாக மூவாற்று முகத்ததை சென்றடையும். அங்கு ஆராட்டு மற்றும் பூஜைகள் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் மேலாளர் மோகன் குமார் மற்றும் நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் செய்துள்ளனர்.

Tags:    

Similar News