வழிபாடு

2 ஆண்டுகளுக்கு பிறகு திருப்பரங்குன்றத்தில் நாளை தேரோட்டம்

Published On 2022-12-05 11:36 IST   |   Update On 2022-12-05 11:36:00 IST
  • பதினாறு மண்டபம் வளாகத்தில் "தேர்" நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
  • வண்ண துணிகளால் அலங்காரம் செய்யப்பட்டு தேர் தயார்படுத்தப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறகூடிய பங்குனி பெருவிழாவில் கிரிவல பாதையில் மகா தேரோட்டம் நடைபெறும். இதற்காக கோவில் வாசல் முன்பு பெரிய தேர் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் தை மாதத்தில் தெப்பத் திருவிழா மற்றும் கார்த்திகை மாதத்தில் திருக்கார்த்திகை தீப திருவிழாவில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெறும்.

இதற்காக பதினாறு மண்டபம் வளாகத்தில் "தேர்" நிலைநிறுத்தப்பட்டுள்ளது. பதினாறுகால் மண்டப வளாகத்தில் இருந்து கீழ ரதவீதி, பெரிய ரதவீதி, மேலரதவீதி வழியாக தேர்வலம் வரும். அதில் ஏராளமான பக்தர்கள் தேரினை வடம்பிடித்து தரிசனம் செய்வார்கள். இத்தகைய நிகழ்வானது காலம், காலமாக தொன்றுதொட்டு நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் கொரோனா தொற்றால் ஏற்பட்ட ஊரடங்கின் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெறவில்லை. இந்தநிலையில் தற்போது திருக்கார்த்திகை தீப திருவிழா கடந்த 28-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முத்தாய்ப்பாக வருகின்ற 6-ந்தேதி திருக்கார்த்திகை நாளாகும்.

ஆகவே கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு திருப்பரங்குன்றம் ரதவீதிகளில் தேரோட்டம் நடைபெறுகிறது. தேரோட்டத்தையொட்டி பதினாறுகால் மண்டப வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ள தேரின் மீது தண்ணீர் பீய்ச்சி சுத்தம் செய்யப்பட்டது. மேலும் வண்ண துணிகளால் அலங்காரம் செய்யப்பட்டு தேரோட்டத்திற்கு தேர் தயார்படுத்தப்பட்டுள்ளது. நாளை(செவ்வாய்கிழமை) காலையில் தேரோட்டம் நடக்கிறது.

Tags:    

Similar News