வழிபாடு

12-ம் நூற்றாண்டில் சோழ சாளுக்கிய மன்னர்களால் கட்டப்பட்ட இயற்கை எழில் கொஞ்சும் திருமணஞ்சேரி சுகந்த பரிமளேஸ்வரர் கோவில்.

கதைகேளு... கதைகேளு...திருமணஞ்சேரி கதைகேளு

Published On 2023-05-12 13:25 IST   |   Update On 2023-05-12 13:25:00 IST
  • இத்திருத்தலம் ஒரு காலத்தில் ராஜராஜ வளநாடு என்று அழைக்கப்பட்டது.
  • வணிகரின் மகள் பரிமளேஸ்வரரை நினைத்து வேண்டினாள்.

கறம்பக்குடி அருகே உள்ள திருமணஞ்சேரியில் 12-ம் நூற்றாண்டில் சோழ, சாளுக்கிய மன்னர்களால் கட்டப்பட்ட சுகந்த பரிமளேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள கல்வெட்டுகளில் சோழ, சாளுக்கிய மற்றும் பாண்டிய மன்னன் காலத்தின் வரலாற்று குறிப்புகள் உள்ளன. இத்திருத்தலம் ஒரு காலத்தில் ராஜராஜ வளநாடு என்று அழைக்கப்பட்டது. இங்கு வசித்த வணிகர் ஒருவருக்கு அழகான மகள் இருந்தாள். அவளை மதுரையில் வசித்த தன் தங்கை மகனுக்கு திருமணம் செய்ய முடிவெடுத்தார் வணிகர். ஆனால் வணிகரின் தங்கை மகன் ஏற்கனவே திருமணம் செய்திருந்தான். இருப்பினும் உறவு விட்டுப் போய் விடக்கூடாது என்பதற்காக தன் பெண்ணை தன் தங்கை மகனுக்கே திருமணம் செய்ய முடிவு செய்திருந்தார் வணிகர்.

திடீரென வணிகர் இறந்தார். அதிர்ச்சியில் அவரது மனைவியும் இறந்தாள். மாமன் இறந்த செய்தி அறிந்து மதுரையில் இருந்து மருமகன் புறப்பட்டு வந்தான். மாமன், அவரது மகளைத் தனக்கு திருமணம் செய்ய விருப்பமுடன் இருந்ததை உறவினர்கள் வாயிலாக அறிந்தான். இதனால், தன் ஊருக்கு அழைத்துச் சென்று உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்ய எண்ணி, தன்னுடன் வந்திருந்த அனைவரையும் முன்னால் அனுப்பிவிட்டு, அப்பெண்ணை கூட்டிக்கொண்டு பின்னால் நடந்து சென்றான். இரவு நேரமானதால் இருவரும் வழியில் இருந்த ஒரு வில்வ மரத்தடியில் லிங்கமும், கிணறும் இருப்பதை கண்டு அதில் குளித்துவிட்டு லிங்கத்தை வணங்கி, அருகே தலை வைத்து படுத்தனர். அப்போது ஒரு விஷப்பாம்பு அவனைத் தீண்ட அவன் அங்கேயே இறந்தான்.

காலையில் உண்மை அறிந்த வணிகரின் மகள், தனக்கிருந்த ஒரே உறவும் இறந்ததை கண்டு அலறி துடித்தாள். இதைக் கண்டு ஒரு முதியவராக சிவன் காட்சி தந்து, அவளுக்கு ஆறுதல் கூறி, அந்த கிணற்று நீரை அவன் மீது தெளிக்க, விஷம் நீங்கி அவன் எழுந்தான். பெரியவர் இருவரையும் அங்கேயே திருமணம் செய்து கொள்ளக் கூறினார். ஆனால் அவர்கள் தங்கள் உறவினர்கள் இல்லாமல் திருமணம் செய்து கொள்ள தயங்கினர். அப்போது ஈசன் அவர்கள் முன்னே தோன்றி வன்னி மரமும், கிணற்று நீரும் சாட்சியாக திருமணம் செய்வித்தார்.

இதனால் மனம் மகிழ்ந்த இருவரும் வன்னிமர பரிமளேஸ்வரரை வணங்கி புறப்பட்டனர். இறைவன் முன் நின்று திருமணம் நடைபெற்றதால் இத்திருத்தலம் திருமணஞ்சேரி என்று அழைக்கப்படுவதாக தல வரலாறு கூறுகிறது. மேலும் மதுரையில் இவர்கள் திருமணம் குறித்து உறவினர்களிடையே பிரச்சினை வரவே, இருவரும் நடந்ததை கூற யாரும் நம்பாமல் பரிகாசம் செய்தனர்.

இதனால் வணிகரின் மகள் பரிமளேஸ்வரரை நினைத்து வேண்டினாள். அன்று இரவு அவளது கனவில் ஈசன் தோன்றி, உன் திருமணத்திற்கு சாட்சி மதுரை மீனாட்சி கோவிலுக்கு வரும் என்று கூறி மறைந்தார். இதை ஊர் பெரியவர்களிடம் சொல்ல அனைவரும் அங்கு சென்று பார்த்தனர். அப்போது மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் வடக்கு பிரகாரத்தில் வன்னி மரமும், கிணறும் தோன்றின.(இந்த கிணறு இன்றும் உள்ளது. வன்னி மரம் ஆடி வீதியில் இருக்கிறது). இதை பார்த்து அவள் சொன்னது உண்மை என்று உறவினர்கள் ஆசிர்வதித்து சென்றனர்.

Similar News