வழிபாடு

தஞ்சை பெரியகோவிலில் நவராத்திரி கலை விழா: மனோன்மணி அலங்காரத்தில் அருள்பாலித்த பெரியநாயகி அம்மன்

Published On 2022-09-26 04:43 GMT   |   Update On 2022-09-26 04:43 GMT
  • வராகிஅம்மன் சன்னதி அருகே பிரகாரத்தில் கொலு கண்காட்சி நடைபெற்றது.
  • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தஞ்சை பெரிய கோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். இது தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்வதோடு மட்டுமல்லாமல் உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது. இங்கு தமிழகம் மட்டும் அல்லாது வெளிமாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

இந்த கோவிலில் ஆண்டுதோறும் நவராத்திரி கலை விழா நடைபெறுவது வழக்கம். அதன் படி இந்த ஆண்டுக்கான நவராத்திரி கலை விழா நேற்று தொடங்கியது. இதையொட்டி பெரியநாயகி அம்மனுக்கு அபிஷேக ஆராதனையும், சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டது. முதல்நாளான நேற்று பெரியநாயகி அம்மனுக்கு மனோன்மணி அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

மேலும் வராகிஅம்மன் சன்னதி அருகே பிரகாரத்தில் நவராத்திரி கலைவிழாவையொட்டி கொலு கண்காட்சி நடைபெற்றது. இதை பக்தர்கள் பார்த்து மகிழ்ந்தனர். நவராத்திரி விழாவின் போது தினமும் பெரிய நாயகி அம்மனுக்கு காலை 7.30 மணிக்கு அபிஷேக ஆராதனையும், மாலை 6.30 மணிக்கு சிறப்பு அலங்காரமும் நடைபெறுகிறது.

2-ம் நாளான இன்று (திங்கட்கிழமை) மீனாட்சி அலங்காரமும், நாளை (செவ்வாய்க்கிழமை) சதஸ் அலங்காரமும், 28-ந் தேதி காயத்திரி அலங்காரமும், 29-ந் தேதி அன்னபூரணி அலங்காரமும் நடைபெறுகிறது. 30-ந் தேதி பெரியநாயகி அம்மனுக்கு கஜலட்சுமி அலங்காரமும், 1-ந் தேதி சரஸ்வதி அலங்காரமும், 2-ந் தேதி ராஜராஜேஸ்வரி அலங்காரமும், 3-ந் தேதி மகிஷாசுரமர்த்தினி அலங்காரமும், 4-ந் தேதி விஜயதசமி அலங்காரமும் நடைபெறுகிறது.

Tags:    

Similar News