வழிபாடு

தமிழ் புத்தாண்டு: பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் இன்று தீர்த்தவாரி உற்சவம்

Published On 2023-04-14 03:55 GMT   |   Update On 2023-04-14 03:55 GMT
  • இரவு புத்தாண்டிற்கான பஞ்சாங்கம் வாசிக்கப்படுகிறது.
  • பக்தர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து தரிசனம் செய்ய வேண்டும்.

திருப்பத்தூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டியில் பிரசித்தி பெற்ற கற்பகவிநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தினந்தோறும் இங்கு வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். மேலும் ஆண்டுதோறும் தமிழ்புத்தாண்டு தினத்தன்று இங்குள்ள திருக்குளத்தில் தீர்த்தவாரி உற்சவம் நிகழ்ச்சி நடைபெறுவதும் வழக்கமாக இருந்து வருகிறது.

இதையடுத்து தமிழ் புத்தாண்டு தினத்தையொட்டி இன்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு பூர்வாங்க பூஜை நடைபெற்று அதன் பின்னர் சுவாமி தரிசனம் தொடங்க உள்ளது. மேலும் காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் கோவில் திருக்குளத்தில் அஸ்திர தேவர் மற்றும் அங்குச தேவருக்கு தலைமை சிவாச்சாரியார் பிச்சைக்குருக்கள் தலைமையில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறுகிறது. தொடர்ந்து மூலவர் கற்பகவிநாயகர் தங்க கவசத்திலும், உற்சவர் வெள்ளி மூஷிக அலங்காரத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றனர்.

தொடர்ந்து இரவு 7 மணிக்கு மூலவர் சன்னதி முன்பு புத்தாண்டு பஞ்சாங்கம் வாசிக்கப்படுகிறது. புத்தாண்டு தினத்தையொட்டி பக்தர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து தரிசனம் செய்ய வேண்டும். இதுதவிர கோவில் நிர்வாகம் சார்பில் காலை முதல் இரவு வரை குடிதண்ணீர், உணவு, சுகாதாரம் ஆகிய வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர்கள் கண்டவராயன்பட்டி எஸ்.தண்ணீர்மலை செட்டியார், காரைக்குடி சா.க.சுவாமிநாதன் செட்டியார் ஆகியோர் செய்து வருகின்றனர். இதேபோல் தமிழ்புத்தாண்டை முன்னிட்டு காரைக்குடி அருகே குன்றக்குடி சண்முகநாதபெருமான் கோவிலில் மடத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து பொன்னம்பல அடிகளார் தலைமையில் கோவில் வீதியை சுற்றி வந்து சண்முகநாதபெருமானுக்கு பாலாபிஷேகம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

Tags:    

Similar News