வழிபாடு

மணலிக்கரை புனித சூசையப்பர் ஆலயம்.


மணலிக்கரை புனித சூசையப்பர் ஆலய அர்ச்சிப்பு விழா இன்று நடக்கிறது

Published On 2023-01-26 11:15 IST   |   Update On 2023-01-26 11:15:00 IST
  • அர்ச்சிப்பு விழா இன்று மாலை 4 மணிக்கு நடக்கிறது.
  • ஆலய பங்கு பணியாளர் மரிய டேவிட் தலைமை தாங்குகிறார்.

தக்கலைக்கு அருகில் உள்ள மணலிக்கரையில் 1912-ம் ஆண்டு கொல்லம் மறை மாவட்டத்தின் ஆயராக அலோசியஸ் மரிய பென்சிகர் இருந்த போது புனித சூசையப்பர் ஆலயம் சிறிய அளவில் கட்டப்பட்டது, இந்த ஆலயத்தில் 1918-ல் முதல் பங்குப் பணியாளராக தனிஸ்லாஸ் பணியாற்றினார்.

அதன்பிறகு 1963-1969 காலகட்டத்தில் பங்கு பணியாளராக ஜெரோம் இருந்த போது ஆலயம் பெரிதாக கட்டப்பட்டது. அதைத்தொடர்ந்து 2018 -ம் ஆண்டு பங்கு பணியாளராக இருந்த கிறிஸ்துதாஸ் பங்குமக்களின் ஒத்துழைப்புடன் நூற்றாண்டு பழமை வாய்ந்த ஆலயத்தை, புதிய ஆலயமாக கட்டுவதற்கான பணிகளை தொடங்கினார்.

இந்த நிலையில் 2020-ல் பங்கு பணியாளராக பொறுப்பேற்ற மரிய டேவிட் தலைமையில் ஆலயப்பணி வேகமாக நடந்து, புதிய புனித சூசையப்பர் ஆலயம் கட்டிமுடிக்கப்பட்டுள்ளது, இந்த ஆலயம் மணலிக்கரை ஆர்.சி.தெரு, மணக்காவிளை, மாவறவிளை, ஆற்றுக்கோணம் ஆகிய நான்கு ஊர்களை உள்ளடக்கி, சுவாமியார் மடம், கல்லங்குழி, முகிலன்கரை, சோலாபுரம், பெருஞ்சிலம்பு, குமாரபுரம் ஆகிய ஆறு கிளை பங்குகளோடு செயல்படுகிறது.

புதிய புனித சூசையப்பர் ஆலயத்தின் அர்ச்சிப்பு விழா இன்று (வியாழக்கிழமை) மாலை 4 மணிக்கு நடக்கிறது.

இதற்கு ஆலய பங்கு பணியாளர் மரிய டேவிட் தலைமை தாங்குகிறார், பாளையங்கோட்டை மறைமாவட்டத்தின் ஓய்வுபெற்ற ஆயர் ஜுடு பால்ராஜ் புதிய ஆலயத்தை அர்ச்சித்து திருப்பலியை நிறைவேற்றி ஆலயம் மற்றும் பீடத்தையும் அர்ச்சிக்கிறார்.

மார்த்தாண்டம் சீரோ மலங்கரை மறைமாவட்ட ஆயர் வின்சென்ட் மார் பவுலோஸ் கலந்து கொண்டு அருளுரையாற்றுகிறார்.

சிறப்பு விருந்தினர்களாக கார்மல் சபையின் தமிழ்நாடு மறைமாநிலத் தலைவர் நேசமணி, குழித்துறை மறைமாவட்ட தொடர்பாளர் இயேசு ரெத்தினம் மற்றும் பங்குப் பணியாளர்கள், பங்குமக்கள், அருள்சகோதரிகள், பங்கு பேரவையினர், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொள்கிறார்கள்.

விழா ஏற்பாடுகளை பங்கு பணியாளர் மரிய டேவிட் தலைமையில் விழாக்கமிட்டி நிர்வாகிகள் செய்துள்ளனர்.

Tags:    

Similar News