வழிபாடு

ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலில் பகல்பத்து விழா தொடக்கம்

Published On 2022-12-24 04:32 GMT   |   Update On 2022-12-24 04:32 GMT
  • பிறந்த வீட்டிற்கு வந்த ஆண்டாளுக்கு பச்சை காய்கறிகள் பரப்பி வரவேற்றனர்.
  • ஏராளமான பக்தர்கள் திரண்டு தரிசனம் செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் மார்கழி மாத திருவிழாவையொட்டி பகல்பத்து, ராப்பத்து உற்சவம் நடப்பது வழக்கம். பகல்பத்து தொடக்கத்தின்போது பச்சைப்பரப்புதல் வைபவம் நடைபெறும். அப்போது கோவிலில் இருந்து ஆண்டாள், ெரங்க மன்னாருடன் தான்பிறந்த வீட்டிற்கு வருவார்.

பச்சை பரப்புதல் என்பது நெல்லிக்காய், வாழைக்காய், கரும்பு, தடியங்காய், கத்தரிக்காய், முருங்கைகாய் உள்ளிட்ட காய்கறிகள் பரப்பி வைக்கப்பட்டு இருக்கும். ஆண்டாள் தன் வீட்டிற்கு வரும் போது பச்சை காய்கறிகளை பரப்பி வைத்திருந்தால் வீடும், ஊரும் செழிப்பாக இருக்கும் என்பது ஐதீகம்.

இந்த ஆண்டுக்கான பகல்பத்து திருவிழா நேற்று தொடங்கியது. இதையொட்டி ஆண்டாள் பிறந்த வீட்டில் அவருக்கு பிடித்த உணவு வகைகள், காய்கறிகள் வைக்கப்பட்டிருந்தன. சர்வ அலங்காரத்தில் ரெங்கமன்னாருடன் ஆண்டாள் எழுந்தருளி மாலை 5 மணிக்கு புறப்பட்டார்.

இதையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பிறந்த வீட்டில் ஆண்டாளுக்கு பிடித்த மணி பருப்பு, திரட்டுபால், அக்காரவடிசல் ஆகியவற்றை படைத்து சிறப்பு பூஜை நடைபெற்றது. ஆண்டாள் வந்தபோது பெரியாழ்வார் வம்சாவளியை சேர்ந்த வேதபிரான் பட்டர் சுதர்சன், ஆண்டாளை வரவேற்று அழைத்து சென்றார். ஏராளமான பக்தர்கள் திரண்டு தரிசனம் செய்தனர்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி முத்துராஜா ஆகியோர் செய்திருந்தனர். இதையடுத்து பரப்பி வைத்திருந்த காய்கறிகள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டன.

Tags:    

Similar News