வழிபாடு

நவம்பர் 1-ந்தேதி முதல் ஸ்ரீகாளஹஸ்தி கோவிலுக்குள் பக்தர்கள் செல்போன்கள் கொண்டு செல்ல தடை

Published On 2022-10-28 08:09 GMT   |   Update On 2022-10-28 08:09 GMT
  • தெலுங்கு கார்த்திகை மாதம் என்பதால் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர்.
  • பக்தர்கள் கோவிலின் மாண்பை இழிவுப்படுத்தும் விதமாக நடக்கக்கூடாது.

திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசுலு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

கடந்த 25-ந்தேதி சூரிய கிரகணத்தின்போது சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்களுக்கிடையே இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இது, திட்டமிட்டு செய்யப்பட்டதாகக் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சியை ஆய்வு செய்தபோது தெரிய வந்தது. பக்தர்களின் இந்தச் செயல் கண்டனத்துக்குரியது. பக்தர்கள் கோவிலின் மாண்பை இழிவுப்படுத்தும் விதமாக நடக்கக்கூடாது.

தற்போதுள்ள அறங்காவலர் குழு எந்தவித சுயநலமுமின்றி கோவிலின் வளர்ச்சிக்காகவும், கோவிலின் புகழை இழிவுப்படுத்தும் விதமாக எந்தச் செயலிலும் ஈடுபடவில்லை. இதேபோல் கோவிலில் மூலவர் சன்னதியில் சம்பிரதாய உடை அணிந்தவர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

தற்போது தெலுங்கு கார்த்திகை மாதம் என்பதால் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். பக்தர்களின் கூட்டத்தைக் கருத்தில் கொண்டு, மகா லகு தரிசனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதைப் பக்தர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.

நவம்பர் மாதம் 1-ந்தேதியில் இருந்து ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் தங்களின் செல்போன்களை கோவிலுக்குள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட உள்ளது. இதை, பக்தர்கள் கருத்தில் கொள்ள வேண்டும். தேவஸ்தானத்துக்கு ஒத்துழைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது அறங்காவலர் குழு உறுப்பினர்கள் பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News