வழிபாடு

அதிசயம் நிறைந்த சிவாலயங்கள்

Published On 2023-07-01 08:36 GMT   |   Update On 2023-07-01 08:36 GMT
  • புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகர்ணம், குடைவரைக் கோவில் புகழ் பெற்றது.
  • திருக்கோகர்ணேஸ்வரர், இங்கே பாகம்பிரியாள் அன்னையுடன் அருள்பாலிக்கிறார்.

* வில்வம், நொச்சி, மாவிலங்கை, முட்கிளுவை, விளா ஆகிய ஐந்தையும் 'பஞ்ச வில்வம்' என்று பெரியோர்கள் கூறுவர். இவற்றின் தழைகளில் மூவிதழ்கள் கொண்ட பத்திரங்களைக் கொண்டு, சிவராத்திரியின் நான்கு சாமங்களிலும் சிவ பூசை செய்தல் வேண்டும் என்று காரணாகமம் கூறுகின்றது.

* தென்காசி விசுவநாதர் கோவில் கோபுரப்பணியை தொடங்கியவர், பராக்கிரம பாண்டியன். ஆனால் அந்தப் பணியை அவரால் முழுமையாக முடிக்க முடியவில்லை. எனவே அவர், "ஒப்பற்ற இத்திருக்கோவில் பணியினை முடித்து காப்பவரின் அடிகளை, என் முடி மீது தாங்கிப் போற்றுவேன்" என்று சொல்லியதாக கல்வெட்டுச் செய்தி குறிப்பிடுகின்றது. பின்பு அண்ணன், பணி அரைகுறையாய் கிடத்தல் கூடாது என்று நினைத்து, குலசேகரப் பாண்டியன் அந்த கோபுரப்பணியை முடித்ததைஅறிய முடிகிறது.

* கும்பகோணம் கீழ்க்கோட்டத்தில் உள்ள நாகேஸ்வரர் திருக் கோவிலில், சூரியன் தமிழகத்திற்கு நேராக இயங்கும் காலமான சித்திரை மாதத்தில் 11, 12 மற்றும் 13 ஆகிய நாட்களில் மூலவர் மீது சூரியன் தன்னுடைய ஒளிக் கிரகணங்களைப் படரவிட்டு வழிபாடு செய்கின்றான்.

* புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகர்ணம், குடைவரைக் கோவில் புகழ் பெற்றது. புதுக்கோட்டை சமஸ்தான மன்னர்கள் உருவாக்கியுள்ள இக்கோவில் `மகிழவனம்' என்ற பெயரில் விளங்கி, குல தெய்வக் கோவிலாகக் கட்டப்பட்டது. திருக்கோகர்ணேஸ்வரர், இங்கே பாகம்பிரியாள் அன்னையுடன் அருள்பாலிக்கிறார்.

* மதுரைக்கு அருகில்' விராதனூர்' என்னும் சிவத்தலத்தில் சிவன், `ரிஷபாரூடர்' வடிவத்தில் நான்கு வேதங்களையும் கால்களாகக் கொண்ட நந்தியின் மீது பார்வதியுடன் காட்சி தந்து அருள்பாலிக்கிறார்.

*திருவாரூர் தூவாய் நாதருக்கு அபிஷேகம் செய்யும் போது இவரது திருமேனியில் கண் தடம் தெரியும். சுந்தரருக்கு கண் கிடைத்த தலம் இது.

* சிவனின் (சுயம்புலிங்கம்) எதிரில் சூரிய பகவான் நின்று சிவதரிசனம் செய்யும் கோலத்தினை தஞ்சை பரிதியப்பர் கோவில் பாஸ்கரேஸ்வரர் ஆலயத்தில் மட்டுமே காணலாம்.

* திருவாடானை ஆதிரத்தினபுரீஸ்வரர் ஆலய சுயம்பு மூர்த்திக்கு உச்சிக் காலத்தில் பாலாபிஷேகம் செய்தால் இறைவன் நீல நிறத்தில் காட்சி தருவார்.

* ராமேசுவரம் கோவில் பிரகாரம் பிரமாண்டமானது. இது 1212 தூண்கள், 690 அடி நீளம், 435 அடி அகலம் கொண்டது. இக்கோவிலின் இந்த மூன்றாம் பிரகாரம் உலகப் புகழ்பெற்றது.

* வேதாரண்யம் திருமரைக்காயர் தலத்தின் தலமரம் வன்னிமரம். இம்மரத்தில் காய்க்கும் காயின் ஒரு பக்கம் நீளமாகவும், முட்களுடனும் உள்ளது. இதன் இன்னொரு பக்கம் உருண்டையாகவும் முட்கள் இல்லாமலும் உள்ளது.

- இரா. அருண்குமார், புதுச்சேரி.

Tags:    

Similar News