பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவிலில் 6-ந்தேதி ராமநவமி விழா
- இன்று விசேஷ லட்சார்ச்சனையும், பூர்வாங்க பூஜைகளும் தொடங்குகிறது.
- மாலை 4.30 மணிக்கு சீதாராம திருக்கல்யாணம் வைபவம் நடக்கிறது.
சென்னை:
திண்டிவனம்- புதுச்சேரி சாலையில் மத்திய திருப்பதி என்று அழைக்கப்படும் பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவிலில் ராமநவமி விழா நேற்று தொடங்கி, வருகிற 6-ந்தேதி சீதாராம திருக்கல்யாண வைபவத்துடன் விழா நிறைவடைகிறது.
விழா நாட்களில் யாகசாலையில் விசேஷ ஹோமங்கள் மற்றும் ஏழு கால சிறப்பு பூஜைகள் நடக்கிறது. கோவிலில் உள்ள ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி சன்னதியில் இன்று (வியாழக்கிழமை) காலை விசேஷ லட்சார்ச்சனையும், பூர்வாங்க பூஜைகளும் தொடங்குகிறது.
அக்னிமதனம் என்று அழைக்கப்படும் அக்னியை உருவாக்கி உரிய பூஜைகளுக்குப் பின் யாகம் வளர்க்கப்படுகிறது.
தொடர்ந்து, ராமநவமியையொட்டி 6-ந்தேதி காலை 8.45 மணிக்கு சீதா சமேத ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி மற்றும் 36 அடி விஸ்வரூப ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேய சாமிக்கு 2 ஆயிரம் லிட்டர் பால், பன்னீர், சந்தனம் போன்ற திரவியங்களால் அன விசேஷ திருமஞ்சனம் நடக்கிறது.
7-ம் கால பூஜைகளுக்கு பிறகு திருமஞ்சனமும், புஷ்பங்களால் அபிஷேகமும் நடக்கிறது. காலை 9 மணிக்கு சிறப்பு நாதஸ்வரம் மற்றும் கவிஞர் சுப்பு ஆறுமுகத்தின் மகள் பாரதி திருமகன் குழுவினரின் வில்லிசை ராமாயண நிகழ்ச்சி நடக்கிறது. மாலை 4.30 மணிக்கு சீதாராம திருக்கல்யாணம் வைபவம் நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் தலைவர் மற்றும் நிர்வாக அறங்காவலர் எம்.கோதண்டராமன், கூடுதல் தலைவர் ஆர்.யுவராஜன், செயலாளர்கள் எஸ்.நரசிம்மன் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.