கும்பகோணம் ராமசாமி கோவிலில் இன்று ராமநவமி விழா தேரோட்டம்
- கருட பகவான் உருவம் வரையப்பட்ட கொடி ஏற்றப்பட்டது.
- பக்தி கோஷம் முழங்க பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
சுவாமிமலை:
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற ராமசாமி கோவில் அமைந்துள்ளது. 'தென்னக அயோத்தி' என அழைக்கப்படும் இக்கோவிலில் ஆண்டுதோறும் ராமநவமி திருவிழா வெகு விமரிசை யாக நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, இந்த ஆண்டுக்கான ராமநவமி விழா கடந்த மாதம் (மார்ச்) 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்று, தீபாராதனை காண்பிக்கப்பட்டு, மங்கள வாத்தியங்கள் முழங்க கருட பகவான் உருவம் வரையப்பட்ட கொடி ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து, விழா நாட்களில் தினமும் சிறப்பு அலங்காரத்தில் உற்சவ மூர்த்திகள் இந்திர விமானம், சூரியபிரபை, சேஷம், கருடர், அனுமன், யானை உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா காட்சிகள் நடைபெற்று வந்தது.
முக்கிய நிகழ்வான ஓலை சப்பரத்தில் கருட சேவை, கோரதம் புறப்பாடு ஆகியவை சிறப்பாக நடந்தது. விழாவின் சிகர நிகழ்வான தேரோட்டம் ராமநவமி நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை கோலாகலமாக நடந்தது.
முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் சீதா, ராமர், லெட்சுமணன், ஆஞ்சநேயர் ஆகியோர் தேரில் எழுந்தருளினர். தொடர்ந்து, பூஜைகள் நடைபெற்று, தீபாராதனை காண்பிக்கப்பட்டு தேரோட்டம் தொடங்கியது.
இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஜெய் ஸ்ரீராம்.. ஜெய் ஸ்ரீராம்... பக்தி கோஷம் முழங்க வடம் பிடித்து இழுத்தனர்.
தொடர்ந்து, தேரானது 4 ரத வீதிகள் வழியாக வலம் வந்து நிலையை அடைந்தது. பின்னர், உற்சவர்களுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
ராமநவமி மற்றும் தேரோட்டத்தை யொட்டி கோவிலில் ஏராளமான பக்தர்கள் திரண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பின்னர், இரவு கோவில் வளகத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும், நாளை (திங்கட்கிழமை) சப்தாவர்ணமும், 8-ந்தேதி விடையாற்றியுடன் விழா நிறைவடைகிறது.