வழிபாடு

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் 30-ந்தேதி தேரோட்டம்

Published On 2022-08-22 08:07 GMT   |   Update On 2022-08-22 08:49 GMT
  • தேரோட்டம் 30-ந்தேதி நடக்கிறது
  • வருகிற 27-ந்தேதி மாலை கஜமுகசூரசம்ஹாரம் நடைபெறுகிறது.

சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் பிரசித்தி பெற்ற கற்பக விநாயகர் கோவில் உள்ளது.மூலவராக விநாயகர் வீற்றிருக்கும் இக்கோவில் குடவரை கோவில் ஆகும். இங்கு ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி திருவிழா விமர்சியாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு வருகிற 31-ந் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி இன்று பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை முன்னிட்டு விநாயகர், சண்டிகேஸ்வரர், அங்குசத்தேவர் ஆகியோர் சிறப்பு அலங்காரங்களில் கொடிமரம் அருகில் எழுந்தருளினர்.

அதனை தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத காலை9.30 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட கொடி மரத்துக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. விழா நடக்கும் நாட்களில் தினமும் காலை, மாலையில் விநாயகர் பல்வேறு வாகனங்களில் வீதிஉலா வந்து அருள்பாலிக்கிறார்.

அதன்படி இன்று மாலை தங்க மூஷிக வாகனத்தில் வீதிஉலா நடக்கிறது. விழாவில் 6-ம் நாளான 27-ந் தேதி கஜமுக சூரசம்ஹாரமும், சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 30-ந் தேதியும் நடக்கிறது. அன்றைய நாளில் சந்தனகாப்பு அலங்காரத்தில் விநாயகர் காட்சி அளிக்கிறார்.

விநாயகர் சதுர்த்தி அன்று (31-ந் தேதி) காலையில் கோவில் குளத்தில் அங்குசத்தேவருக்கு தீர்த்தவாரியும், மதியம் மூக்குரணி மோதகம் மூலவருக்கு படையலும், இரவில் பஞ்சமூர்த்திகள் வீதி உலாவுடன் விழா நிறைவடைகிறது.

விழா நடக்கும் நாளில் தினசரி மாலையில் கலை நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள், ஆன்மீகச் சொற்பொழிவுகள் நடைபெறும்.

Tags:    

Similar News