வழிபாடு

திருச்சானூர் கோவிலில் பஞ்சமி தீர்த்தம் அன்று 2,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர்

Published On 2022-11-12 06:54 GMT   |   Update On 2022-11-12 06:54 GMT
  • திருச்சானூரில் 2 ஆண்டுகளுக்கு பிறகு பிரம்மோற்சவம் நடக்க உள்ளது.
  • பிரம்மோற்சவ விழா நிறைவு நாளில் பஞ்சமி தீர்த்தம் நடக்கிறது.

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருகிற 20-ந்தேதியில் இருந்து 28-ந்தேதி வரை வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா நடக்கிறது. நிறைவு நாளில் பஞ்சமி தீர்த்தம் நடக்கிறது. அதற்காக நடந்து வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டம் திருப்பதியில் உள்ள சுவேத பவனில் நடந்தது.

கூட்டத்துக்கு தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி பங்கேற்று பேசினார்.

அவர் பேசியதாவது:-

திருச்சானூரில் 2 ஆண்டுகளுக்கு பிறகு பிரம்மோற்சவம் நடக்க உள்ளது. திருமலையில் நடக்கும் பிரம்மோற்சவ விழா பாணியில் பிரமாண்டமாக நடத்தப்படும். வாகனச் சேவை நிகழ்ச்சிகள் அனைத்தும் தெலுங்கு, தமிழ், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் பக்தி சேனலில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.

பஞ்சமி தீர்த்தத்தில் பங்கேற்க ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்காக, இந்த முறை பக்தர்களுக்கு சிறப்பு காம்பார்ட்மெண்டுகள் மற்றும் ஜெர்மன் ஷெட்டுகள் அமைத்துத்தரப்படும்.

கோவிலில் இருந்து திருச்சானூர் செல்லும் வழித்தடங்களில் தேவையான சாலைகளை சீரமைத்துக் கொள்ளலாம். போக்குவரத்துப் பிரச்சினை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

புஷ்கரணியில் பக்தர்கள் புனித நீராட செல்லும்போது, தள்ளு முள்ளு நடக்கக்கூடாது. அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் இருக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொள்ள வேண்டும். பஞ்சமி தீர்த்தம் அன்று 2 ஆயிரத்து 500 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவர்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் இணை அதிகாரி வீரபிரம்மன், போலீஸ் சூப்பிரண்டு பரமேஸ்வர்ரெட்டி, கமிஷனர் அனுபமாஅஞ்சலி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News