வழிபாடு

தூத்துக்குடி பனிமயமாதா ஆலய திருவிழா கொடியேற்றம்

Published On 2022-07-27 11:02 IST   |   Update On 2022-07-27 11:02:00 IST
  • 2 ஆண்டுகளுக்கு பிறகு கொடியேற்ற விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
  • 5-ந்தேதி இரவு 7 மணிக்கு சப்பரத்தில் அன்னையின் திருவுருவ பவனி நடக்கிறது.

உலக பிரசித்தி பெற்ற தூத்துக்குடி பனிமயமாதா பேராலய திருவிழா ஆண்டுதோறும் ஜூலை 26-ந் தேதி தொடங்கி, ஆகஸ்டு மாதம் 5-ந் தேதி வரை நடக்கிறது. இந்த விழாவில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்வது வழக்கம்.

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக பக்தர்கள் இன்றி விழா நடந்தது. இந்த ஆண்டு ஆலயத்தில் அனைத்து நிகழ்ச்சிகளும் வழக்கம் போல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி நேற்று முன்தினம் மாலையில் கொடிபவனி நடந்தது.

நேற்று காலையில் கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. காலை 5 மணிக்கு முதல் திருப்பலி, 5.45 மணிக்கு 2-ம் திருப்பலி நடந்தது. காலை 7 மணிக்கு சிறப்பு திருப்பலி நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து அன்னையின் கொடி ஆலயத்தை சுற்றி மேளதாளம் முழங்க எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து ஆலயத்தின் முன்பு உள்ள கொடிமரத்தில் காலை 8.50 மணிக்கு தூத்துக்குடி மறை மாவட்ட பிஷப் ஸ்டீபன் கொடியை ஏற்றி வைத்தார். அப்போது புறாக்கள் பறக்கவிடப்பட்டன. பழைய துறைமுகத்தில் நிறுத்தப்பட்டு இருந்த இழுவை கப்பல் மூலம் ஒலி எழுப்பப்பட்டது. அதன்பிறகு பக்தர்கள் நேர்ச்சையாக வைத்த பால், பழம் உள்ளிட்டவற்றை மக்களுக்கு வழங்கினர்.

விழாவில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து மதியம் 12 மணிக்கு கருமாத்தூர் அருளானந்தர் கல்லூரி முதல்வர் ரூபஸ் பர்னான்டோ தலைமையில் அன்னைக்கு பொன்கிரீடம் அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக 5-ந் தேதி காலை 7.30 மணிக்கு பெருவிழா கூட்டு திருப்பலியும், 9 மணிக்கு மறைமாவட்ட முதன்மை குரு பன்னீர்செல்வம் தலைமையிலும், 10 மணிக்கு பிஷப் இவோன் அம்புரோஸ் தலைமையிலும் சிறப்பு திருப்பலியும் நடக்கிறது. மாலை 5 மணிக்கு பாளையங்கோட்டை மறை மாவட்ட பிஷப் அந்தோணிசாமி தலைமையில் பெருவிழா நிறைவு திருப்பலி நடக்கிறது. இரவு 7 மணிக்கு நகர வீதிகளில் சப்பரத்தில் அன்னையின் திருவுருவ பவனி நடக்கிறது.

Tags:    

Similar News