வழிபாடு

தெற்கு கள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா ஆலய தேர் பவனி நடந்த போது எடுத்த படம்

வள்ளியூர் அருகே தெற்கு கள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா ஆலய தேர் பவனி

Published On 2022-08-06 07:02 GMT   |   Update On 2022-08-06 07:02 GMT
  • தமிழகத்தில் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் பல்லாயிரக்கணக்கனோர் கலந்து கொண்டனர்.
  • இரவு 12 மணிக்கு பரிசுத்த அதிசய பனிமாதா தேரில் எழுந்தருளி வீதி உலா வந்து காட்சி கொடுத்தார்.

வள்ளியூர் அருகே உள்ள தெற்கு கள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா ஆலய திருவிழா ஆண்டுதோறும் ஜூலை மாதம் 27-ந் தேதி தொடங்கி 10 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும். அதன்படி 137-வது ஆண்டு திருவிழா கடந்த மாதம் 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கொடியேற்றத்தை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு முதல் திருப்பலியும், அதனை தொடர்ந்து திருயாத்திரை திருப்பலியும் நடந்தது. மாலையில் பக்தர்கள் தங்கள் நேர்த்தி கடனாக தத்து கொடியை கோவிலை சுற்றி வந்து காணிக்கையாக செலுத்தி தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர். பின்னர் நற்கருணை ஆசீருடன் கொடியை அர்ச்சித்து தர்மகர்த்தா ஜெபஸ்டின் ஆனந்த் கொடியை ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில் தமிழகத்தில் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் பல்லாயிரக்கணக்கனோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து 10 நாட்கள் நடந்த திருவிழாவில் தினமும் காலையில் திருயாத்திரையுடன் திருப்பலியும், மாலையில் ஜெபமாலை மறையுரையுடன் கூடிய நற்கருனை ஆசீரும் நடந்தது. 9-ம் திருவிழாவன்று காலையில் ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் திருயாத்திரை திருப்பலியும், மாலையில் பாளையங்கோட்டை மறை மாவட்ட ஆயர் அந்தோணிசாமி தலைமையில் ஜெபமாலை, மறையுரை, நற்கருணை ஆசீரும் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சபாநாயகர் அப்பாவு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இரவு 12 மணிக்கு பரிசுத்த அதிசய பனிமாதா தேரில் எழுந்தருளி வீதி உலா வந்து காட்சி கொடுத்தார். நிகழ்ச்சியில் தமிழகத்தில் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 10-ம் திருவிழாவான நேற்று ஆயர் தலைமையில் கூட்டுத் திருப்பலி நடந்தது.

விழா ஏற்பாடுகளை தர்மகர்த்தா டாக்டர் ஜெபஸ்டின் ஆனந்த், பங்குத்தந்தை ஜெரால்ட் ரவி, உதவி பங்குத்தந்தை சிபு ஜோசப் மற்றும் தெற்கு கள்ளிகுளம் கத்தோலிக்க கிறிஸ்தவ நாடார் மகமை சங்க நிர்வாகக்குழு உறுப்பினர்கள், இறை மக்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News