18 சித்தர்களுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு நர்மதை மருந்தீஸ்வரர் அருள்பாலித்த காட்சி.
நர்மதை மருந்தீஸ்வரர் கோவிலில் 60 அடி உயர மகா சதாசிவம் சிலை அமைக்க முடிவு
- 25 தலைகள், 50 கைகளுடன் 60 அடி உயரத்தில் மகா சதாசிவம் சிலை அமைக்கப்படுகிறது.
- கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பச்சை கயிறு, பச்சை நிற குங்குமம் ஆகியவற்றை ஒரு ரூபாய் பிரசாதமாக வழங்குகிறோம்.
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே ஊத்துக்குளி ரோடு ஆதித்யா நகரில் சென்னிமலை சிவஞான சித்தர்கள் பீடம் அறக்கட்டளை சார்பில் அமைக்கப்பட்ட நர்மதை மருந்தீஸ்வரர் உடனமர் ஓம் நர்மதாம்பிகை கோவில் உள்ளது.
இந்த கோவிலில் நடைபெறும் விசேஷ தினங்கள் மற்றும் பூஜைகள் குறித்து அறக்கட்டளை நிறுவன தலைவரும், சென்னிமலை சித்தருமான சரவணானந்த சரஸ்வதி சாமிகள் கூறியதாவது:-
18 சித்தர்களுடன் இமயமலை ஜோதிர்லிங்கமாக காட்சியளிக்கும் இந்த கோவிலில் கடந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இங்குள்ள 3½ அடி உயரம் கொண்ட சுயம்பு சிவலிங்கம் மத்திய பிரதேச மாநிலத்தில் நர்மதை நதியில் இருந்து 6 ஆண்டுகள் தேடி கிடைக்கப்பெற்று பின்னர் கொண்டு வந்து பிரதிஷ்டை செய்யப்பட்டது.
கோவிலில் பவுர்ணமி அன்று காலையில் அருள்வாக்கும், மாலையில் 18 சித்தர்களுக்கு பவுர்ணமி பூஜையும் நடைபெறுகிறது. மேலும் அமாவாசை தினம் மற்றும் தமிழ் மாதம் முதல் வியாழக்கிழமை அன்று குபேர யாக வேள்வியும், தேய்பிறை அஷ்டமி நாட்களில் சிறப்பு யாக வேள்வியும் நடைபெறும்.
அகில பாரதிய சன்னியாசிகள் சங்கத்தில் ராமானந்த சாமிகளிடம் துறவரம் தீட்சை பெற்று இந்த சங்கத்தின் ஈரோடு மாவட்ட பொறுப்பாளராக நான் செயல்பட்டு வந்ததால் தற்போது சென்னிமலை ஆதீனமாக என்னை அறிவித்துள்ளனர்.
இங்குள்ள ஆலய வளாகத்தில் மகா சதாசிவம் சாமிக்கு 25 தலைகள், 50 கைகள் கொண்ட சுதை சிலை 60 அடி உயரத்தில் அமைக்க முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பச்சை கயிறு, பச்சை நிற குங்குமம் ஆகியவற்றை ஒரு ரூபாய் பிரசாதமாக வழங்குகிறோம். திருமண தடை, தொழில் தடை, எதிரிகள் தொல்லை நீங்கி செல்வ வளங்களை கொடுக்கும் வகையில் பிரதி மாதம் தேய்பிறை அஷ்டமி அன்று சொர்ண ஆகர்ஷன பைரவருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அன்னதானம் வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.