வழிபாடு

மாசாணி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள்

Update: 2022-06-29 06:55 GMT
  • மாசாணி அம்மனுக்கு சிறப்பு யாகம் நடைபெற்றது.
  • மாசாணி அம்மனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

திருப்புவனம் அருகே உள்ளது லாடனேந்தல் கிராமம். இங்கு பூங்காவனம் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் நிர்வாகியாக நாகராணி அம்மையார் உள்ளார். பூங்காவனம் முத்துமாரியம்மன் கோவில் சார்பில் மார்கழி மாதம் 18-ந்தேதி கோவில் முன்பு 7 அடி உயரத்திற்கு உடை முள், கற்றாலை முள் உள்பட பல முட்களை கொண்டு முள்படுக்கை அமைத்து அதில் சாமியார் நாகராணி அம்மையார் நின்றபடியும், சாமியாடியும், முள்படுக்கையில் படுத்தபடி அருள்வாக்கு கூறுவார்.

இதற்காக கார்த்திகை மாதம் முதல் நாள் விரதம் இருந்து மார்கழி மாதம் 18 வரை 40 நாட்கள் கடும் விரதம் இருப்பார். இந்த முள்படுக்கையின்போது மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், தேனி உள்பட பல மாவட்டங்களில் இருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்வது வழக்கம்.

இதேபோல் இக்கோவிலில் பங்குனி உற்சவ விழா 3 நாட்கள் சிறப்பாக நடைபெறும். விழாவின் சிகர நிகழ்ச்சியாக 3-வது நாள் நாகராணி அம்மையாரும், பக்தர்களும் சேர்ந்து வைகையாற்றில் இருந்து பால்குடம் எடுத்து வந்து கோவில் முன்பு பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியும் நடைபெறும். மேலும் இக்கோவில் வளாகத்தில் உள்ளது மாசாணி அம்மன் சிலை. இந்த சிலையானது 41 அடி நீளத்தில் மாசாணி அம்மன் படுத்த நிலையில் தனியாக கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

இங்கு ஒவ்வொரு அமாவாசை தினத்தன்று யாகம் வளர்த்து சிறப்பு பூஜைகள் நடைபெற்று தீபராதனை நடைபெறுவது வழக்கம். இதேபோல் ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் பூங்காவனம் முத்துமாரியம்மன் கோவிலில் விளக்கு பூஜை நடைபெறும். மேலும் மாசாணி அம்மன் கோவிலில் பக்தர்கள் நேர்த்திக்கடன் நடைபெற்ற பின்னர் மாசாணி அம்மனுக்கு சேலைகள் வாங்கி வந்து சிலைகள் மேல் சாத்தி வணங்கி வருகின்றனர்.

இதைபோல் நூற்றுக்கணக்கான சேலைகள் சிலை மேல் சாத்தப்பட்டுள்ளது. மேலும் தங்களது காணிக்கைளையும் அம்மன் மீது செலுத்துகின்றனர். இதையடுத்து நேற்று அமாவாசையையொட்டி மாசாணி அம்மனுக்கு சிறப்பு யாகம் நடைபெற்றது. அதன் பின்னர் சிறப்பு பூஜைகள் நடைபெற்று தீபாரதனைகள் நடைபெற்றது. கோவிலுக்கு வெளியே பக்தர்கள் தங்களது பெயர், நட்சத்திரம் கூறி பூஜைகள் நடைபெற்றது. மாசாணி அம்மனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அதன்பின்னர் சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் பூசாரி மாரிமுத்து தலைமையில் குழுவினர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News