வழிபாடு

ஆனைமலையில் மாசாணியம்மன் கோவிலில் மகா முனி பூஜை

Published On 2023-02-08 05:33 GMT   |   Update On 2023-02-08 05:33 GMT
  • எச்சில் சோறை பக்தர்களுக்கு வழங்கினார்.
  • பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

கோவை மாவட்டம் ஆனைமலை உப்பாற்றாங்கரையில் சயனநிலையில் பக்தர்களுக்கு மாசாணியம்மன் அருள்பாலித்து வருகிறார். மாசாணியம்மனின் காவல் தெய்வமாக மகாமுனி திகழ்ந்து வருகிறார். மாசாணியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் குண்டம் திருவிழா பிரசித்தி பெற்றதாகும்.

இந்த ஆண்டுக்கான குண்டம் திருவிழா கடந்த 21-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மயான பூஜை கடந்த 3-ந் தேதி நள்ளிரவு நடைபெற்றது. இதைத்தொடர்ந்து சக்தி கும்பஸ்தாபனம், மகாபூஜை, சித்திர தேர் வடம் பிடித்தல், அம்மன் திருவீதி உலா, குண்டம் பூ வளர்த்தல் நடந்தது. 6-ந் தேதி காலை 6.30 மணிக்கு விரதம் இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கினார்கள். பின்னர் நேற்று முன்தினம் காலை 9 மணிக்கு மஞ்சள் நீராடுதல், கொடி இறக்குதல் நடைபெற்றது. இதையடுத்து அம்மன் திருவீதி உலா நடைபெற்றது.

குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நிறைவடைந்ததையொட்டி மாசாணியம்மன் முன் உருட்டிய விழிகளுடன் உட்கார்ந்த நிலையில் காவல் தெய்வமாக உள்ள மகாமுனிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று மாலை முதல் மகாமுனி பூஜைக்கான ஏற்பாடுகள் நடைபெற்றது.

இதையொட்டி மகாமுனிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் மகாமுனி அருளாளி சுப்பிரமணியை அழைத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. அருள் வந்த நிலையில் வீட்டில் இருந்த மகாமுனி அருளாளி சுப்பிரமணியை மேள-தாளம், வாண வேடிக்கைகளுடன் தலைமை முறைதாரர் மனோகரன், அம்மன் அருளாளிகள் குப்புசாமி, அருண், முறைதாரர்கள் மற்றும் அருளாளிகள் அழைத்தனர். தொடர்ந்து அருள் வந்த நிலையில் ஆக்ரோஷமாக இருந்த அருளாளி சுப்பிரமணியை சேலையால் கட்டி மாசாணியம்மன் கோவிலுக்கு அழைத்து வந்தனர். பின்னர் இரவு 9 மணிக்கு மகாமுனிக்கு புளிசாதம், தயிர்சாதம், எலுமிச்சை சாதம், இளநீர், மண் கலயத்தில் தண்ணீர், பழம் போன்ற பொருட்களுடன் சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

இதையடுத்து மகாமுனி அருளாளி சுப்பிரமணி படையல் சாப்பாடை சாப்பிட்டபடியே கோவிலை சுற்றி எச்சில் வலம் வந்தார். மகாமுனியின் எச்சில் சோறு கிடைத்தால் குழந்தை வரம் இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். இதனால் திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாத பல பெண்கள் தங்களுக்கு குழந்தை வரம் வேண்டி மகாமுனியின் எச்சில் சோறுக்கு கண்ணீருடன் காத்திருந்தனர். 9.35-க்கு எச்சில் சோறை பக்தர்களுக்கு வழங்கினார். மேலும் ஒரு சிலருக்கே மகாமுனியின் எச்சில் சோறு கிடைத்தது.

மகாமுனியின் எச்சில் சோறு கிடைத்த பெண்கள் சந்தோஷத்தில் ஆனந்த கண்ணீர் வடித்தபடியே மகாமுனியை வணங்கினர். கிடைக்காத பெண்கள் சோகத்துடன் கதறி அழுத காட்சி அனைவரையும் உருக வைத்தது.

மகாமுனி பூஜையை காண கோவிலில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கோவில் வளாகத்தில் குவிந்து இருந்தனர். பூஜை முடிந்த பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று மகா அபிஷேகம், அலங்கார பூஜையுடன் குண்டம் திருவிழா நிறைவு பெறுகிறது.

Tags:    

Similar News