வழிபாடு

மதுரை சித்திரை திருவிழா: வைகை ஆற்றில் அழகர் இறங்கும் இடத்தில் கலெக்டர் ஆய்வு

Published On 2023-04-25 13:53 IST   |   Update On 2023-04-25 13:53:00 IST
  • கள்ளழகர் கோவில் சித்திரைத் திருவிழா வருகிற 30-ந் தேதி தொடங்குகிறது.
  • 5-ந் தேதி கள்ளழகர் மதுரை வைகை ஆற்றில் எழுந்தருளுகிறார்.

அழகர்கோவில் கள்ளழகர் கோவில் சித்திரைத் திருவிழா வருகிற 30-ந் தேதி தொடங்குகிறது. இதன் முக்கிய நிகழ்வாக அடுத்த மாதம் 4-ந்தேதி மதுரை மூன்றுமாவடியில், கள்ளழகரின் எதிர்சேவை நடக்கிறது. 5-ந் தேதி அதிகாலை வரை தல்லாகுளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் எதிர்சேவை நடக்கிறது.

5-ந் தேதி காலை 5.45 மணி முதல் 6.12 மணிக்குள் கள்ளழகர் மதுரை வைகை ஆற்றில் எழுந்தருளுகிறார். கலெக்டர் அனீஷ்சேகர் இன்று காலை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் ஆழ்வார்புரம் பகுதியில் ஆய்வு செய்தார். அவருடன் மாநகராட்சி கமிஷனர் சிம்ரன்ஜித்சிங், மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

மதுரையில் கடந்த ஆண்டு சித்திரை திருவிழாவின் போது 2 பக்தர்கள் கூட்டநெரிசலில் சிக்கி இறந்தனர். 8 பேர் படுகாயம் அடைந்தனர். நடப்பாண்டு சித்திரை திருவிழாவில் அசம்பாவிதம் நடக்காத வகையில், முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டது.

பக்தர்கள் வருகை, வாகன நிறுத்தம், வைகை ஆற்றில் தண்ணீர் திறப்பு, விழா மேடை அமைப்பு, காவல்துறை பாதுகாப்பு உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

பின்னர் கலெக்டர் அனீஷ்சேகர் கூறியதாவது:-

கடந்த ஆண்டு போல எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாத வகையில் முன்னேற்பாடு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளோம். கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்விற்காக வைகை அணையில் இருந்து வருகிற 30-ந் தேதி தண்ணீர் திறக்கப்படுகிறது.

சித்திரை திருவிழாவை யொட்டி மதுரை மாவட்டத்திற்கு வருகிற 5-ந் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் விழாவிற்கு வருகை தருவதற்காக அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.

பக்தர்கள் எந்தவித அச்சமும் இன்றி சுவாமி தரிசனம் செய்வதற்கான முன்னேற்பாடுகளை மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் ஒருங்கி ணைந்து செயல்படுத்தும் என்றார்.

Tags:    

Similar News