வழிபாடு

சிறப்பு பூஜை நடந்தபோது எடுத்த படம்.

குருவித்துறையில் குரு பெயர்ச்சி விழா: திரளான பக்தர்கள் குவிந்தனர்

Published On 2023-04-23 04:26 GMT   |   Update On 2023-04-23 04:26 GMT
  • குருபகவானுக்கு திருமஞ்சனம், சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்தனர்.
  • பரிகார ராசிகளுக்கு அர்ச்சனை நடந்தது.

சோழவந்தான் அருகே வைகைஆறு கரை அருகே குருவித்துறை கிராமம் உள்ளது. இங்கு பிரசித்தி பெற்ற சித்திரரத வல்லபபெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் குரு பகவானுக்கு தனி சன்னதி உள்ளது. இந்த சன்னதியில் குருபகவான், பெருமாளை நோக்கி தவக்கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இதே சன்னதியில் சக்கரத்தாழ்வாரும் உள்ளார். ஒவ்வொரு குருபெயர்ச்சி தோறும் குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆவது வழக்கம்.

அதன்படி இதுவரை மீனம் ராசியில் இருந்து வந்த குருபகவான் நேற்று இரவு 11.21 மணி அளவில் மேஷ ராசிக்கு பெயர்ச்சி ஆனார். இதை தொடர்ந்து குருவித்துறை குருபகவான் கோவிலில் குருபெயர்ச்சி விழா 3 நாட்கள் நடந்தது. இந்த விழாவை முன்னிட்டு கடந்த வியாழக்கிழமை காலை 10.30மணி அளவில் லட்சார்ச்சனை ஆரம்பமானது. நேற்று மதியம் வரை லட்சார்ச்சனை நடைபெற்றது.

நேற்று இரவு 9 மணி அளவில் பரிகார மகாயாக பூஜை நடந்தது. இதில் ஸ்ரீதர்பட்டர், ரெங்கநாதபட்டர், சடகோபப்பட்ட, பாலாஜிபட்டர், ராஜாபட்டர் உள்பட 15 அர்ச்சகர்கள் வேதமந்திரங்கள் ஓதி யாகபூஜை நடத்தினர். மகாபூர்ணாஹீதி, அர்ச்சகர்கள் புனித நீர்க்குடங்களை எடுத்து மேளதாளத்துடன் கோவிலை சுற்றி வலம் வந்தனர். குருபகவானுக்கு திருமஞ்சனம், சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்தனர். குருபகவான், சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு அலங்காரம் செய்து பரிகார ராசிகளுக்கு அர்ச்சனை நடந்தது.

இதில் வெங்கடேசன் எம்.எல்.ஏ. மற்றும் முக்கிய பிரமுகர்கள், பக்தர்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் குருபகவானை தரிசித்தனர். அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் ராஜ்குமார் தலைமையில் மருத்துவ குழு மற்றும் வாடிப்பட்டி தாசில்தார் வீரபத்திரன் தலைமையில் வருவாய்த்துறையினர் மற்றும் அறநிலைய துறையினர் போலீசாருடன் தடுப்பு வேலி ஏற்படுத்தி பக்தர்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்தி சமூக இடைவெளியுடன் சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்திருந்தனர்.

சமயநல்லூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசுந்தர், சோழவந்தான் இன்ஸ்பெக்டர் சிவபாலன் உள்பட 400-க்கும் மேற்பட்ட போலீசாரும், சோழவந்தான் தீயணைப்பு நிலைய அலுவலர் பசும்பொன், போக்குவரத்து அலுவலர் பழனிமுத்து தலைமையில் தீயணைப்பு படையினர் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். விழாவையொட்டி சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இளங்கோவன், செயல் அலுவலர் பாலமுருகன், கோவில் பணியாளர்கள் நாகராஜ், மணி பிரகாஷ், ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News