வழிபாடு

தசரா திருவிழா இன்று நிறைவு: குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் பக்தர்கள் காப்பு களைந்தனர்

Published On 2022-10-07 04:54 GMT   |   Update On 2022-10-07 04:54 GMT
  • இரவில் சேர்க்கை அபிஷேகம் நடைபெற்றது.
  • இன்று பகல் 12 மணிக்கு சிறப்பு பாலாபிஷேகத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

பிரசித்தி பெற்ற குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கடந்த மாதம் 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பல்வேறு நாட்கள் விரதம் இருந்த பக்தர்கள் காப்பு, பல்வேறு வேடங்கள் அணிந்து, ஊர் ஊராக சென்று காணிக்கை வசூலித்தனர்.

ஒவ்வொரு ஊரிலும் பக்தர்கள் தசரா குழுக்கள் அமைத்து, வாகனங்களில் ஊர் ஊராக சென்று, கலைநிகழ்ச்சி நடத்தியும் காணிக்கை வசூலித்தனர். விழா நாட்களில் கோவிலில் தினமும் அம்மன் பல்வேறு வாகனங்களில் வெவ்வேறு கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று முன்தினம் இரவில் கடற்கரையில் நடந்தது. இதை காண்பதற்காக பல லட்சக்கணக்கான பக்தர்கள் கடற்கரையில் குவிந்தனர்.

நள்ளிரவு 12 மணியளவில் அம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேசுவரர் கோவிலுக்கு முன்பாக எழுந்தருளினார். முதலில் ஆணவமே உருவான மகிஷாசூரன் மூன்று முறை அம்மனை வலம் வந்து போரிட தயாரானான். அவனை அம்மன் சூலாயுதத்தால் வதம் செய்தார். பின்னர் சிங்க முகம், எருமை தலை, சேவல் என அடுத்தடுத்து உருமாறி போர் புரிய வந்த மகிஷாசூரனை அம்மன் சூலாயுதத்தால் வதம் செய்தார். அப்போது கூடியிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் 'ஓம் காளி, ஜெய் காளி' என்று விண்ணதிர பக்தி கோஷங்களை முழங்கி அம்மனை வழிபட்டனர்.

பின்னர் கடற்கரை மேடையில் எழுந்தருளிய அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து சிதம்பரேசுவரர் கோவிலில் எழுந்தருளிய அம்மனுக்கு சாந்தாபிஷேகம், தீபாராதனை நடந்தது. பின்னர் அம்மன் தேரில் பவனி வந்து கோவிலை சென்றடைந்தார். தொடர்ந்து வேடம் அணிந்த பக்தர்கள் சேகரித்த காணிக்கைகளை கோவில் உண்டியலில் செலுத்தினர்.

விழாவின் 11-ம் நாளான நேற்று காலை 6 மணிக்கு பூஞ்சப்பரத்தில் அம்மன் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை 4 மணிக்கு அம்மன் கோவில் வந்து சேர்ந்தவுடன் கொடியிறக்கப்பட்டது.

தொடர்ந்து அம்மனின் காப்பு களையப்பட்டது. பின்னர் வேடம் அணிந்த பக்தர்களின் காப்புகளை கோவில் அர்ச்சகர்கள் களைந்தனர். இரவில் சேர்க்கை அபிஷேகம் நடைபெற்றது.

12-ம் நாளான இன்று (வெள்ளிக்கிழமை) காலையில் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, பகல் 12 மணிக்கு சிறப்பு பாலாபிஷேகத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை கோவில் தக்காரும், உதவி ஆணையருமான சங்கர், இணை ஆணையர் அன்புமணி, செயல் அலுவலர் ராமசுப்பிரமணியன் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து இருந்தனர்.

Tags:    

Similar News