வழிபாடு

சகல தோஷ நிவர்த்தி தரும் `கீழப்பழுவூர் ஆலந்துறையார்'

Published On 2024-12-13 08:38 IST   |   Update On 2024-12-13 08:38:00 IST
  • தவம் செய்த அம்பிகை என்பதால், அருந்தவநாயகி என பெயர் பெற்றாள்.
  • பிரிந்த தம்பதியரை இணைக்கும் ஆலயம்.

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் என்ற இடத்தில் இருக்கிறது, அருந்தவ நாயகி உடனாய ஆலந்துறையார் திருக்கோவில். இந்த ஆலயம் சோழ நாட்டின் காவிரி வடகரையில் அமைந்த 63 ஆலயங்களில் 55-வது தலமாக போற்றப்படுகிறது.

இவ்வாலய இறைவன், 'ஆலந்துறையனார்', 'வடமூலேஸ் வரர்', 'யோகவனேஸ்வரர்' என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறார். இவ்வாலய அம்மன் 'அருந்தவநாயகி', 'யோகதபஸ்வினி' என்ற பெயர்களில் புகழப்படுகிறார்.

பார்வதி தேவி தவம் செய்த இடம், பிரம்மன், திருமால், அகத்தியர், இந்திரன், சூரியன், வசிஷ்டர், காசியபர், வியாசர், பரசுராமர் ஆகியோர் வழிபாடு செய்த தலம், மாத்ருஹத்தி தோஷம், திருமணத்தடை நீக்கும் தலம், பிரிந்த தம்பதியரை இணைக்கும் ஆலயம், மிகப்பெரிய சோமாஸ்கந்த திருமேனி கொண்ட ஆலயம் போன்ற பல்வேறு சிறப்புகளைக் கொண்டதாக இந்த திருக்கோவில் திகழ்கிறது. இக்கோவிலின் தல விருட்சமாக ஆலமரமும், தல தீர்த்தமாக பிரம்ம தீர்த்தமும் உள்ளன.


தல வரலாறு

ஒரு முறை கயிலாயத்தில் இருந்த போது, பார்வதி தேவி விளையாட்டாக சிவபெருமானின் கண்களை மூடினாள். இதனால் சிவனின் இரு கண்களாக விளங்கும் சூரியன்- சந்திரன் இருவரும் ஒளி இழந்தனர். இதனால் உலக இயக்கம் நின்றது. முனிவர்களும், தேவர்களும் கலங்கினர்.

அப்போது சிவபெருமான் தனது தேவியிடம், "விளையாட்டாக தவறு செய்தாலும் மற்றவர்களுக்கு அது பாதிப்பை ஏற்படுத்துமானால், அது பாவமே. எனவே இந்த பாவத்திற்கு பரிகாரமாக, நீ என்னைப் பிரிந்து பூலோகம் செல்.

அங்கு பல தலங்களில் தவம் செய்து இறுதியாக அங்குள்ள யோகவனத்தில் தங்கி இரு. நான் அங்கு வந்து உன்னுடன் சேர்வேன்" என்றார்.

அதன்படி பார்வதியும் யோகவனத்தில் புற்று மண்ணால் சிவலிங்கம் அமைத்து தவம் செய்தாள். தவம் இருந்த அம்பிகைக்கு உறுதுணையாக சப்த மாதர்களும், வீரபத்திரரும் உடனிருந்தனர். தவம் முற்று பெற்றவுடன் இறைவன் தோன்றி உமையுடன் இணைந்தார்.

உமையம்மை தவம் செய்த அந்த யோகவனமே, இன்றைய பழுவூர் ஆகும். தவம் செய்த அம்பிகை என்பதால், இவ்வாலய இறைவி 'அருந்தவநாயகி' என பெயர் பெற்றாள்.

தந்தையின் சொற்படி தாயின் தலையை வெட்டியதற்காக, பரசுராமருக்கு 'மாத்ருஹத்தி தோஷம்' உண்டானது. பல தலங்களில் வழிபட்டும், பரசுராமரின் தோஷம் நீங்கவில்லை.

ஒரு கட்டத்தில் இவ்வாலயம் இருக்கும் இடத்திற்கு வந்த பரசுராமர், அங்கிருந்த ஆலமரத்தின் கீழ் இருந்த புற்று லிங்கத்தை வணங்கியதும், அவரது தோஷம் விலகியது. ஆலமரத்தின் கீழ் தோன்றிய இறைவன் என்பதால் அவருக்கு 'ஆலந்துறையார்' என்ற பெயர் வந்தது.

பரசுராமர் இந்த ஆலய இறைவனை வணங்கியதை நினைவுகூரும் விதமாக, கருவறைக்கு முன்புள்ள உத்திரத்தில் பரசுராமரின் உருவம் பொறிக்கப்பட்டிருக்கிறது.


ஆலய அமைப்பு

மருதுடையார் ஆற்றின் தென்பகுதியில் சிறிய வளைவுடன் கூடிய வாசலுடனும், கிழக்கு நோக்கிய மூன்று நிலை ராஜகோபுரத்துடனும், இரண்டு பிரகாரங்களுடனும் இந்த ஆலயம் அமையப்பெற்றிருக்கிறது.

கோவிலுக்கு வெளியே தலவிருட்சமான ஆலமரம் பிரமாண்டமாக வளர்ந்து நிற்கிறது. கோவிலின் எதிரில் பிரம்ம தீர்த்தம் உள்ளது. ஆலய நுழைவு வாசலைக் கடந்து முதல் பிரகாரம் செல்ல, அங்கே கொடிமர விநாயகர், கொடிமரம், பலிபீடம், நந்தி ஆகியவை உள்ளன.

இடதுபுறத்தில் கிணறும், மடப்பள்ளியும், முன் மண்டபத்தின் வலது புறத்தில், சுவாமிக்கு இடது புறமாக தென்முகம் நோக்கியவாறு அருந்தவநாயகி அம்மன் சன்னிதியும் இடம்பெற்றுள்ளன.

அம்பாள் கருவறைக்கு முன்பாக இச்சா சக்தியும், கிரியா சக்தியும் துவாரபாலகிகளாக இருந்து காவல் புரிகின்றனர். இச்சா சக்தியின் அருகே விநாயகர் அமர்ந்து அருள்பாலிக்கிறார். அதனைத் தொடர்ந்து வாகன மண்டபம் அமைந்துள்ளது.

இரண்டாவது பிரகாரத்திற்குள் சென்றால் 28 தூண்களைக் கொண்ட அழகிய மண்டபம் உள்ளது. இப்பிரகாரத்தில் தெற்கு திருமாளப்பத்தியில் விநாயகர், உமைமங்கைபாகன், கார்த்தியாயினி, சண்டிகேசுவரர், வீரபத்திரர், மாணிக்கவாசகர், ஞானசம்பந்தர், சுந்தரர், நாவுக்கரசர், கிருது மகரிஷி, அத்திரி மகரிஷி, ஆங்கீரஸ மகரிஷி, ஞானதட்சிணாமூர்த்தி, பிருகு மகரிஷி, பரீஷி மகரிஷி, புலஸ்திய மகரிஷி, வசிட்ட மகரிஷி, பிராமி, மகேசுவரி, கவுமாரி, நாராயணி, வராகி, இந்திராணி, சாமுண்டி ஆகியோர் உள்ளனர்.

இவர்களைத் தொடர்ந்து மேற்கில் விநாயகர், சோமாஸ்கந்தர், கோடி விநாயகர், காசி விசுவநாதர் - விசாலாட்சி, வள்ளி - தெய்வானையுடன் சுப்பிரமணியர் உள்ளனர். அடுத்து கல்லால் ஆன பெரிய சோமாஸ்கந்தர் திருமேனி, அப்புலிங்கம், வாயுலிங்கம், ஆகாய லிங்கம், கஜலட்சுமி சன்னிதிகள் உள்பட மேலும் பல சன்னிதிகள் இருக்கின்றன.

இரண்டாம் பிரகார வலம் முடிந்து, மகா மண்டபம், அர்த்தமண்டபம் செல்லும் வழியில் இரு புறமும் கங்காதரர், கல்யாணசுந்தரர் திருவுருவங்கள் செதுக்கப்பட்டுள்ளது. அடுத்து இடை மண்டபம், அதனையொட்டி கருவறை உள்ளது. கருவறை வாசலின் மேல் சயனக்கோலத்தில் திருமாலின் புடைப்புச் சிற்பம் அற்புதமாக வடிக்கப்பட்டுள்ளது.

கருவறையுள் கருணாமூர்த்தியாய் மூலவர் ஆலந்துறையார் அருள்பாலிக்கின்றார். புற்று வடிவாய், மண் லிங்கமாக சதுர ஆவுடையாரின் நடுவே அபூர்வ தோற்றத்துடன் இவர் வீற்றிருக்கிறார். புற்று மண்ணால் ஆன சிவலிங்கம் என்பதால், இவருக்கு அபிஷேகத்தின்போது குவளை சாற்றப்படுகிறது.

இவ்வாலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்துவைக்கப்பட்டிருக்கும்.

அமைவிடம்

அரியலூர் மாவட்டம், திருமானூர்- அரியலூர் சாலையில் இருக்கிறது, கீழப்பழுவூர். இந்த ஊருக்கு திருச்சி, தஞ்சாவூர், அரியலூர், திருவையாறு ஆகிய இடங்களில் இருந்து பேருந்து வசதிகள் உள்ளன.

பிரார்த்தனையும்.. பலனும்..

தாம்பத்ய சங்கரர், அர்த்தநாரீஸ்வரர் இருவரும் இத்தலத்தில் இருந்து அருள்பாலிப்பதால், குடும்ப ஒற்றுமைக்கு பிரார்த்தனை செய்துகொள்ளும் தலமாகவும், திருக்கடையூருக்கு நிகராக காலசம்ஹார மூர்த்தியைக் கொண்டிருப்பதால் எமபயம் போக்கும் தலமாகவும், அம்பிகை தவம் செய்து இறைவனை மணந்து கொண்டமையால் திருமணத் தடை நீக்கும் தலமாகவும், பரசுராமரின் வேண்டுதலுக்கேற்ப சகல தேவர்களும் சூட்சும ரூபமாக இத்தலத்தில் உறைவதால், சகல செல்வங்களை அளிக்கும் தலமாகவும், பிரம்மஹத்தி தோஷம் நீக்கும் தலமாகவும் இவ்வாலயம் விளங்குகிறது. வேண்டுதல் நிறைவேறியவர்கள், இவ்வாலயம் வந்து கோவில் தீர்த்தத்தில் நீராடி, இறைவனுக்கும், இறைவிக்கும் அபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

Tags:    

Similar News