வழிபாடு

மகாதீபத்தை தரிசிக்க மலை ஏறும் பக்தர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அனுமதி சீட்டு

Published On 2022-12-03 04:56 GMT   |   Update On 2022-12-03 04:56 GMT
  • 6-ந்தேதி மதியம் 2 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலை ஏறுவதற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
  • மலை மீது 2 ஆயிரத்து 500 பக்தர்கள் மட்டுமே ஏற அனுமதிக்கப்படுவார்கள்.

கலெக்டர் முருகேஷ் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற்று வருகிறது. இவ்விழாவின் சிகர நிகழ்ச்சியான மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சி வருகிற 6-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. சென்னை ஐகோர்ட்டு உத்தரவின் படி மகா தீபம் ஏற்றப்படும் மலை மீது 2 ஆயிரத்து 500 பக்தர்கள் மட்டுமே ஏற அனுமதிக்கப்படுவார்கள்.

தீப தரிசன நாளான டிசம்பர் 6-ந் தேதி காலை 6 மணி முதல் பகல் 2 மணி வரை முதலில் வரும் 2 ஆயிரத்து 500 பக்தர்கள் மட்டும் மலையேற அனுமதிக்கப்படுவார்கள். அதற்காக 6-ந் தேதி திருவண்ணாமலை செங்கம் சாலை கிரிவலப்பாதையில் உள்ள கலைஞர் கருணாநிதி கலை கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மையத்தில் காலை 6 மணி முதல் 2 ஆயிரத்து 500 பக்தர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அனுமதி சீட்டு வழங்கப்படும். முதலில் வரும் 2 ஆயிரத்து 500 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி சீட்டு வழங்கப்படும். மலை ஏற அனுமதி சீட்டு பெற வரும் பக்தர்கள் ஆதார் அடையாள அட்டை, வாக்களர் அடையாள அட்டை மற்றும் பிற இதர அடையாள அட்டைகளில் ஏதேனும் ஒன்றின் நகலினை சமர்ப்பித்து அனுமதி சீட்டு பெற்று கொள்ளலாம்.

மலை ஏறும் பக்தர்கள் பே கோபுரம் அருகில் உள்ள வழியாக மட்டுமே மலையேற அனுமதிக்கப்படுவார்கள். மற்ற வழிகளில் மலையேற கண்டிப்பாக அனுமதி வழங்கப்பட மாட்டாது.

6-ந் தேதி மதியம் 2 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலை ஏறுவதற்கு அனுமதிக்கப்படுவார்கள். அவ்வாறு செல்லும் பக்தர்கள் தண்ணீர் பாட்டில் மட்டுமே எடுத்து செல்ல அனுமதிக்கப்படுவார்கள். மேலும் காலி தண்ணீர் பாட்டில்களை மலையில் இருந்து இறங்கி வரும் போது திரும்ப கொண்டு வர வேண்டும். மலையேறும் பக்தர்கள் கற்பூரம், பட்டாசு உள்ளிட்ட எளிதில் தீப்பிடிக்கக் கூடிய பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது. பக்தர்கள் கொண்டு செல்லும் நெய்யினை அனுமதிக்கப்பட்ட கொப்பரையில் மட்டுமே ஊற்ற வேண்டும். வேறு எந்த இடத்திலும் நெய்யினை ஊற்றவோ, நெய் தீபம் ஏற்றவோ கூடாது.

இந்த நிபந்தனைகளை தவறாது கடைபிடித்து அண்ணாமலையார் மலை மீது ஏறுவதற்கு பக்தர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News