வழிபாடு

தெப்பத்திருவிழா: தண்ணீர் இல்லாததால் குளக்கரையில் வைத்து பகவதி அம்மனுக்கு சிறப்பு பூஜை

Published On 2023-06-04 06:33 GMT   |   Update On 2023-06-04 06:33 GMT
  • நள்ளிரவு 12 மணிக்கு முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
  • திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாகப் பெருந்திருவிழா கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10-ம் திருவிழாவான நேற்று முன்தினம் காலையில் அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு நிகழ்ச்சி நடந்தது. மாலை 6 மணிக்கு பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி காமதேனு வாகனத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா வந்த நிகழ்ச்சி, இரவு 8.30 மணிக்கு மண்டகப்படி நிகழ்ச்சி நடந்தது. அப்போது பகவதி அம்மனுக்கு பல வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடும், தீபாராதனையும் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து நர்த்தன பஜனை, இரவு 10 மணிக்கு தெப்பத்திருவிழா நடந்தது. இந்த தெப்பத்திருவிழா கன்னியாகுமரி வடக்கு ரத வீதியில் உள்ள தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடந்த பகவதி அம்மன் கோவில் தெப்பக்குளத்தின் கரையில் நடைபெற்றது. இதையொட்டி பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் பகவதி அம்மனை எழுந்தருள செய்து கோவிலில் இருந்து மேளதாளங்கள் முழங்க தெப்பக்குளத்துக்கு ஊர்வலமாக எடுத்து வந்தனர்.

பின்னர் தெப்பக்குளத்தில் தண்ணீர் இல்லாததால் மேற்குப் பக்கம் உள்ள குளத்தின் கரையில் போடப்பட்டிருந்த பந்தலில் அம்மன் எழுந்தருளி இருந்த வாகனத்தை வைத்து பூஜைகள் நடத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் நள்ளிரவு 12 மணிக்கு முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

Tags:    

Similar News