வழிபாடு

பாடலீஸ்வரர் கோவிலில் திருஞான சம்பந்தர் ஞானப்பால் உண்ட ஐதீக நிகழ்ச்சி

Published On 2022-06-16 03:57 GMT   |   Update On 2022-06-16 03:57 GMT
  • திருஞானசம்பந்தர் அழும் போது அம்பாள் நேரில் தோன்றி பால் கொடுத்ததாக ஐதீகம்.
  • பாடலீஸ்வரர், பெரியநாயகி அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது.

கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் பிரசித்தி பெற்ற பாடலீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் 13 நாட்கள் வைகாசி பெருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான விழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தினசரி காலை, மாலை நேரத்தில் கோவிலில் சிறப்பு பூஜைகளும், இரவில் சாமி வீதிஉலாவும் நடைபெற்றது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் கடந்த 13-ந் தேதி காலை நடந்தது. தொடர்ந்து நேற்று முன்தினம் காலை நடராஜர் திருக்கல்யாணமும், பஞ்சமூர்த்திகள் தீர்த்தவாரியும், இரவில் முத்து பல்லக்குகளில் ராஜ வீதிஉலாவும் நடைபெற்றது. இந்த நிலையில் 11-வது நாள் விழாவான நேற்று திருஞானசம்பந்தர் ஞானப்பால் உண்ட ஐதீக நிகழ்ச்சி நடந்தது.

அதாவது திருஞானசம்பந்தர் அழும் போது அம்பாள் நேரில் தோன்றி பால் கொடுத்ததாக ஐதீகம். இந்த ஐதீக விழா மூல நட்சத்திரத்தன்று பாடலீஸ்வரர் கோவிலில் நடப்பது வழக்கம். அதன்படி மூல நட்சத்திரத்தையொட்டி நேற்று திருஞானசம்பந்தர் ஞானப்பால் உண்ட ஐதீக நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி காலையில் பாடலீஸ்வரர், பெரியநாயகி அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. அதனை தொடர்ந்து உற்சவர் சந்திரசேகரர், பராசக்தி அம்மன், ஞானசம்பந்தர் ஆகியோருக்கு அபிஷேகம் நடைபெற்றது.

63 நாயன்மார்கள் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் சாமி சிவகரக தீர்த்த குளத்தில் எழுந்தருளியதும், அங்கு ஒரு குழந்தையை திருஞானசம்பந்தராக பாவித்து தங்க தோடிகானாவில் வைத்து ஞானப்பால் உண்ட ஐதீக நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதையடுத்து 9 மணியளவில் பஞ்சமூர்த்திகள் ரிஷப வாகனங்களில் வீதிஉலாவும், இரவு 8.30 மணியளவில் திருஞானசம்பந்தர் திருக்கல்யாணமும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News