வழிபாடு

தஞ்சை பெரிய கோவிலில் இன்று சித்திரை திருவிழா தேரோட்டம்- பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்தனர்

Published On 2025-05-07 11:04 IST   |   Update On 2025-05-07 11:04:00 IST
  • பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
  • ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மாமன்னர் ராஜராஜசோழனால் கட்டப்பட்ட உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் வருகை தருகின்றனர். சிறந்த சுற்றுலா தலமாகவும், ஆன்மிக தலமாகவும் பெரியகோவில் விளங்கி வருகிறது.

தஞ்சாவூர் பெரியகோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடைபெறும். அதில் 18 நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெறும் சித்திரை திருவிழா பிரசித்தி பெற்றது. அதன்படி, இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த மாதம் (ஏப்ரல்) 23-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, காலை, மாலை வேளைகளில் சுவாமி-அம்பாள் புறப்பாடு ராஜவீதிகளில் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. தேரோட்டத்தை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு தியாகராஜர், கமலாம்பாள், விநாயகர், நீலோத்பலாம்பாள், வள்ளி, தெய்வானை உடனுறை சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் முத்துமணி அலங்காரத்தில் கோவிலில் இருந்து புறப்பட்டு, மேலவீதியில் உள்ள தேர்நிலை மண்டபத்துக்கு வந்தடைந்தனர். பின்னர், அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளிய தியாகராஜர், கமலாம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதையடுத்து காலை 6 மணிக்கு தேரோட்டத்தை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம், முரசொலி எம்.பி, போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் கண்ணன், அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே, சதய விழாக்குழு தலைவர் செல்வம் உள்ளிட்ட பலர் வடம் பிடித்து தொடங்கி வைத்தனர்.

தொடர்ந்து, தேருக்கு முன்பாக விநாயகர், சுப்பிரமணியர் சப்பரங்களும், பின்னால் நீலோத்பலாம்பாள், சண்டிகேஸ்வரர் சப்பரங்களும் பின் தொடர்ந்து செல்ல தியாகராஜர்-கமலாம்பாள் எழுந்தருளிய தேர் பக்தர்கள் வெள்ளத்தில் அசைந்தாடி சென்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு 'ஆரூரா, தியாகேசா' என்ற பக்தி முழக்கத்துடன் வடம் பிடித்து தேரை இழுத்து சென்றனர். பக்தர்களின் பக்தி கோஷம் விண்ணை முட்டியது. தேரானது 4 ராஜவீதிகளில் அசைந்தாடி சென்ற காட்சி பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது.

மொத்தம் 14 இடங்களில் நிறுத்தப்பட்டு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டு, அர்ச்சனை நடைபெற்றது. பக்தர்கள் தேங்காய், பழம் கொடுத்து அர்ச்சனை செய்தனர். இன்று பிற்பகலில் தேர் நிலையை வந்தடையும்.

தேரோட்ட விழாவில் தஞ்சை மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின்படி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நடமாடும் மருத்துவ குழுவினரும், தீயணைப்பு துறை வாகனமும் தேரை பின்தொடர்ந்தவாறு சென்றது. பெரிய கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் திரண்டதால் தஞ்சை மாநகரமே விழாக்கோலம் பூண்டது. 

Tags:    

Similar News