வழிபாடு

கோனியம்மன் கோவில் தேர் திருவிழாவை காண திரண்ட பக்தர்கள்.

கோவை கோனியம்மன் கோவில் தேரோட்டம் இன்று மதியம் 2 மணிக்கு நடக்கிறது

Published On 2023-03-01 08:17 GMT   |   Update On 2023-03-01 08:17 GMT
  • நாளை பரிவேட்டை நிகழ்ச்சி நடக்கிறது.
  • நாளை மறுநாள் தெப்பத்திருவிழா நடக்கிறது.

கோவையின் காவல் தெய்வமாக கோனியம்மன் கோவில் உள்ளது.

இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தேர்த்திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான தேர்த்திருவிழா கடந்த மாதம் 23-ந் தேதி தேர் முகூர்த்தக்கால் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. கடந்த 14-ந் தேதி பூச்சாட்டு திருவிழாவுடன் தேர்த்திருவிழா தொடங்கியது. 20-ந் தேதி கிராமசாந்தி பூஜையும், 21-ந் தேதி கொடியேற்றம், அக்னிசாட்டு நிகழ்ச்சியும் நடந்தது.

22-ந் தேதி அம்மன் புலி வாகனத்திலும், 23-ந் தேதி கிளி வாகனம், 24-ந் தேதி சிம்மன வாகனம், 25-ந் தேதி அன்ன வாகனம், 26-ந் தேதி காமதேனு வாகனம், 27-ந் தேதி வெள்ளை யானை வாகனத்திலும் அம்மன் வீதி உலா நடந்தது.

தேர்த்திருவிழாவினையொட்டி அனைத்து நாட்களிலும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்த வண்ணம் இருந்தனர். தினமும் பெண் பக்தர்கள் கொடி கம்பத்திற்கு நீருற்றி வழிபட்டு வந்தனர்.

நேற்று திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

விழாவின் சிகர நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று மதியம் 2 மணிக்கு நடக்கிறது. இதனையொட்டி இன்று காலை கோனியம்மனுக்கு 16 வகை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

தொடர்ந்து 6 மணிக்கு அம்மன் திருத்தேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. அம்மன் திருத்தேருக்கு எழுந்தருளுவதை காண திரளான பக்தர்கள் காலையிலேயே கோவிலுக்கு வந்திருந்தனர்.

அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை பய பக்தியுடன் தரிசித்து சென்றனர். மேலும் கோவிலில் வைக்கப்பட்டுள்ள அக்னி சாட்டு கம்பத்திற்கு தண்ணீர் ஊற்றியும், உப்பு நேர்த்தி கடன் செலுத்தியும் சாமி தரிசனம் செய்தனர்.

இன்று மதியம் 2 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. இதில் முக்கிய பிரமுகர்கள், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தேரினை வடம் பிடித்து இழுக்கிறார்கள். தேரோட்டத்தில் பங்கேற்கும் பக்தர்களுக்கு இலவச மோர், தண்ணீர், அன்னதானம் உள்ளிட்டவையும் பல்வேறு அமைப்பினர், அரசியல் கட்சிகள் சார்பில் வழங்கப்பட்டது.

தேரோட்டத்தை யொட்டி தேர் செல்லும் வீதிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

கோனியம்மன் கோவில் தேரோட்டத்தில் செயின் பறிப்பு நடைபெறாத வகையில் கண்காணிப்பு பணியினை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர். செயின் பறிப்பு சம்பவங்கள் நடைபெறாத வகையில் டிரோன் காமிரா மூலமும் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

தேரோட்டத்தை தொடர்ந்து நாளை பரிவேட்டை நிகழ்ச்சி நடக்கிறது. அதனை தொடர்ந்து அம்மன் குதிரை வாகனத்தில் திருவீதி உலா வருகிறார். நாளை மறுநாள் தெப்பத்திருவிழாவும், 4-ந்தேதி தரிசனம், தீர்த்தவாரி, யாளி வாகனம், கொடியிறக்க நிகழ்ச்சி நடக்கிறது. 6-ந் தேதி வசந்தவிழாவுடன் தேரோட்ட விழா நிறைவு பெறுகிறது.

Tags:    

Similar News