வழிபாடு

திருப்பதியில் செப்டம்பர் 27-ந்தேதி தொடங்குகிறது பிரம்மோற்சவ விழா

Update: 2022-07-02 04:50 GMT
  • திருப்பதியில் 2 ஆண்டுக்கு பிறகு பிரம்மோற்சவ விழாவில் பக்தர்களுக்கு அனுமதி.
  • வி.ஐ.பி பிரேக் தரிசனம் அனைத்தும் ரத்து செய்யப்படும்.
  • 2-ந்தேதி தங்க தேரோட்டம் நடக்கிறது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற செப்டம்பர் மாதம் 27-ந்தேதி முதல் அக்டோபர் மாதம் 5-ந்தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடக்கிறது.

செப்டம்பர் மாதம் 27-ந்தேதி கொடியேற்றம் நடக்கிறது. இதில் ஆந்திர மாநில முதல் அமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி பங்கேற்று ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரம் சமர்ப்பணம் செய்கிறார்.

அக்டோபர் மாதம் 1-ந்தேதி கருட சேவை, 2-ந் தேதி தங்க தேரோட்டம், 4-ந்தேதி தேரோட்டம், 5-ந்தேதி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடக்கிறது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக வருடாந்திர பிரமோற்சவ விழாவில் பக்தர்களுக்கு அனுமதியின்றி கோவில் உள்ளே நடந்தது.

மாட வீதிகளில் வாகன சேவை நடக்கவில்லை. கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்திலேயே உற்சவர்களை அலங்காரம் செய்து ஒரு சில பக்தர்கள் வழிபாட்டுக்காக அனுமதிக்கப்பட்டனர்.

ஆனால் இந்த ஆண்டு நடக்கும் பிரம்மோற்சவ விழாவில் கோவிலின் 4 மாட வீதிகளில் வாகன சேவை பிரம்மாண்டமாக நடத்தப்பட உள்ளது.

இந்த முறை அதிகளவில் பக்தர்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. அதற்கு ஏற்ப பிரமாண்ட ஏற்பாடுகளை செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பிரம்மோற்சவ விழா நாட்களில் முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கைக்குழந்தைகளுடன் வரும் பெற்றோருக்கான தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கருட சேவை புரட்டாசி மாதம் 3-வது சனிக்கிழமை நடப்பதால் அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் பங்கேற்பார்கள். சாதாரண பக்தர்கள் அதிக நேரம் சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்படும்.

வி.ஐ.பி பிரேக் தரிசனம் அனைத்தும் ரத்து செய்யப்படும். முக்கியமான வி.ஐ.பி.களுக்கு மட்டும் பிரேக் தரிசனம் வழங்கப்படும்.

பிரம்மோற்சவ விழா நாட்களில் தூய்மையாக வைத்திருக்க சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கருட சேவை அன்று பக்தர்கள் இருசக்கர வாகனங்களில் திருமலைக்கு வர தடை விதிக்கப்படுகிறது. திருப்பதியில் உள்ள வாகன நிறுத்துமிடங்களில் பக்தர்கள் தங்களின் இருசக்கர வாகனங்களை நிறுத்தி வைத்துவிட்டு அரசு பஸ்களில் திருமலைக்கு வரலாம்.

கருட சேவைக்கு முன்தினமும், கருட சேவை அன்றும் கருட சேவைக்கு மறுநாளும் பக்தர்களுக்கு ஆன்லைனில் தங்கும் விடுதிகளில் அறைகள் ஒதுக்கப்பட மாட்டாது. மற்ற நாட்களில் 50 சதவீத அறைகள் பக்தர்களுக்கு நேரில் வழங்கப்படும்.

பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படும். கேலரியில் அமர்ந்திருக்கும் பக்தர்களுக்கு உணவ கவுண்டர்கள் அமைத்து 3 வேளை உணவு, குடிநீர், மோர் ஆகியவை விநியோகம் செய்யப்படும்.

திருமலையில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் பிரம்மோற்சவ விழாவில் பங்கேற்க வரும் பக்தர்கள் கண்ணாடி அல்லது தாமிரம் அல்லது ஸ்டீல் குடிநீர் பாட்டில்களை கொண்டுவர வேண்டும்.

இந்து தர்ம பிரச்சார பரிஷத் சார்பில் 9 நாட்களும் திருமலையில் பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பக்தி சேனல் மூலம் அனைத்து வாகன சேவைகளும் நேரடியாக ஒளிபரப்பப்படும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News