வழிபாடு

பெருவுடையார்-பெரியநாயகி அம்மனுக்கு திருக்கல்யாணம்

Published On 2022-07-13 05:35 GMT   |   Update On 2022-07-13 05:35 GMT
  • கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்கள் இன்றி திருக்கல்யாண வைபவம் நடந்தது.
  • இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

உலகம் போற்றும் தஞ்சை மாநகரின் சிறப்புக்கு தனிப்பெரும் காரணமாக தஞ்சை பெரியகோவில் திகழ்கிறது. மாமன்னன் ராஜராஜ சோழனால் வானளாவிய உயர்ந்த விமானத்துடன் எழுப்பப்பட்ட இந்த கோவிலில் பெரியநாயகி உடனாகிய பெருவுடையார் எழுந்தருளியுள்ளார். இந்த கோவிலில் ஆண்டுதோறும் பெருவுடையார்-பெரியநாயகி அம்மனுக்கும் திருக்கல்யாண வைபவம் மிக சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த திருக்கல்யாணத்தில் கலந்து கொண்டால் திருமண தோஷமுடையவர்கள் தோஷங்கள் நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும் என்பதும், குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும் என்பது ஐதீகம்.

கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்கள் இன்றி திருக்கல்யாண வைபவம் நடந்தது. இந்த ஆண்டு பக்தர்கள் பங்கேற்க திருக்கல்யாண வைபவம் நேற்றுமாலை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பழங்கள், குங்குமம், மஞ்சள் கிழங்கு, திருமாங்கல்ய சரடு, வளையல், சீப்பு, குங்குமச்சிமிழ், கண்ணாடி, இனிப்பு வகைகள், புஷ்பம், தாம்பூலம், ரவிக்கை துணி, வெற்றிலை, பாக்கு போன்ற சீர்வரிசை தட்டுகளுடன் சொக்கநாதர் சன்னதியில் இருந்து புறப்பட்டு நடராஜர் முன் மண்டபத்திற்கு வந்தடைந்தனர். இதையடுத்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, மாப்பிள்ளை அழைப்பு உள்ளிட்ட சடங்குகள் நடைபெற்றன.

தொடர்ந்து ஹோமம் முடிவடைந்த பிறகு பெரியநாயகி அம்மனுக்கு மாங்கல்யம் அணிவிக்கப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து பெரியநாயகி சமேத பெருவுடையார் திருக்கல்யாண கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். இதில் திருமணம் நடைபெறாத இளைஞர்கள், இளம்பெண்களுக்கு பெரியநாயகி அம்மனுக்கு சாத்தப்பட்ட மாலை அணிவிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News