வழிபாடு

கொடைக்கானல் பாம்பார்புரம் பத்ரகாளி அம்மன் உற்சவ விழா: அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன்

Published On 2023-06-15 06:43 GMT   |   Update On 2023-06-15 06:43 GMT
  • சக்தி கரகம், மாவிளக்கு எடுத்தல் நிகழ்ச்சி நடந்தது.
  • அம்மன் வீதி உலா வந்தார்.

கொடைக்கானல் பாம்பார்புரம் பகுதியில் பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உற்சவ விழா கடந்த 6-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முதல் நாளான நேற்று சக்தி கரகம், மாவிளக்கு எடுத்தல் நிகழ்ச்சி நடந்தது. மின் அலங்கார தேர் பவனியில் அம்மன் வீதி உலா வந்தார். மேலும் பாம்பார்புரம், செல்லபுரம், அப்சர்வேட்டரி, புதுக்காடு ஆகிய இடங்களில் நடந்த மண்டகபடிகளில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார்.

இதேபோல் கோவில் முன்பு பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். தீச்சட்டி எடுத்து பக்தி பரவசத்துடன் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். அலகு குத்தி பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்றினர். பக்தர் ஒருவர், 20 அடி நீள அலகு குத்தி வந்து மெய்சிலிர்க்க வைத்தார். பறவை காவடி எடுத்தும் பக்தர்கள் பவனியாக வந்தனர். முக்கிய வீதிகள் வழியாக முளைப்பாரி ஊர்வலமும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முடிவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவின் இறுதி நாளான வருகிற 20-ந்தேதி மறு பூஜை, பாலாபிஷேகம், பால்குடம் எடுத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் விழா கமிட்டியாளர்கள், ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News