வழிபாடு

பண்ணாரி மாரியம்மன் சப்பரம் பவானி ஆற்றை பரிசலில் கடந்து சென்ற காட்சி.

பவானி ஆற்றை பரிசலில் கடந்த பண்ணாரி மாரியம்மன் சப்பரம்

Published On 2023-03-25 04:30 GMT   |   Update On 2023-03-25 04:30 GMT
  • பண்ணாரி மாரியம்மன் சப்பரம் வீதி உலா நடந்தது.
  • சத்தியமங்கலத்தை அடுத்து உள்ளது பண்ணாரி மாரியம்மன் கோவில்.

சத்தியமங்கலத்தை அடுத்து உள்ளது பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில். குண்டம் விழா கடந்த 21-ந் தேதி இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து பண்ணாரி மாரியம்மன் மற்றும் சருகு மாரியம்மன்கள் கிராமங்கள் தோறும் வீதி உலா தொடங்கியது. தாரை தப்பட்டை மற்றும் மங்கள வாத்தியத்துடன் சிக்கரசம்பாளையத்துக்கு சப்பரத்தை கொண்டு் சென்று அங்குள்ள அம்மன் கோவிலில் தங்கினார்கள்.

தொடர்ந்து வெள்ளியம்பாளையம், கொத்தமங்கலம், தொட்டம்பாளையம், வழியாக வெள்ளியம்பாளையம் புதூருக்கு அம்மன் சப்பரம் சென்றது. அங்கு நேற்று முன்தினம் இரவு சப்பரத்துடன் தங்கினார்கள்.

நேற்று 4-வது நாளாக பண்ணாரி மாரியம்மன் சப்பரம் வீதி உலா நடந்தது. சப்பரத்தை இக்கரை தத்தப்பள்ளியில் இருந்து அக்கரை தத்தப்பள்ளி கொண்டு செல்ல பவானி ஆற்றை கடந்து செல்ல வேண்டும். இதற்காக தயாரான நிலையில் அலங்கரிக்கப்பட்ட பரிசல் ஒன்றில் அம்மனின் சப்பரம் வைக்கப்பட்டது.

சப்பரம் ஆற்றை கடந்து அக்கரை தத்தப்பள்ளி சென்றதும் அங்கு கரையில் நின்றிருந்த பக்தர்கள் தாரை தப்பட்டை முழங்க பண்ணாரி மாரியம்மனை வரவேற்றார்கள்.

அதைத்தொடர்ந்து சப்பரம் அக்கரைதத்தப்பள்ளி மாரியம்மன் கோவிலில் இரவு தங்க வைக்கப்பட்டது.

ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் நேற்று பண்ணாரி மாரியம்மன் குண்டம் விழா ஏற்பாடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பக்தர்கள் குண்டம் மிதிக்கும் பகுதியில் கட்டப்பட்டுள்ள தடுப்புகளையும், அம்மனை வணங்க பக்தர்கள் செல்லும் வழிகளையும், தற்காலிக பஸ் நிலையம், கடைகள் அமைக்கப்பட உள்ள பகுதிகளையும் பார்வையிட்டார். பின்னர் அதிகாரிகளுக்கு சில ஆலோசனை வழங்கினார். அப்போது சத்தியமங்கலம் உட்கோட்ட உதவி போலீஸ் சூப்பிரண்டு அய்மன் ஜமால் மற்றும் போலீசார் சென்றனர்.

Tags:    

Similar News