வழிபாடு

திருச்செந்தூர் அருகே அடைக்கலாபுரம் அதிசய ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா கொடியேற்றம்

Published On 2022-09-29 05:23 GMT   |   Update On 2022-09-29 05:23 GMT
  • 6-ந்தேதி ஆரோக்கிய அன்னையின் சப்பர பவனி வீதி உலா நடக்கிறது.
  • 7-ந்தேதி இரவு 9.30 மணிக்கு கொடியிறக்கம் நடக்கிறது.

திருச்செந்தூர் அருகே அடைக்கலாபுரம் அற்புதநகர் அதிசய ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு ஆலய திருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருமூலநகர் பங்குத்தந்தை பீட்டர் பாஸ்டின் தலைமையில் கொடியேற்றம் நடந்தது. தூத்துக்குடி புனித தோமா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் ராயப்பன் மறையுரை மாற்றினார். இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக சூசை அறநிலைய ஆன்மிக இயக்குனர் அருட்தந்தை செட்ரிக் பிரிஸ் தலைமையில் ஜெபமாலை பவனி நவநாள் திருப்பலி நடந்தது. விழாவின் 2-ம் நாளான இன்று (வியாழக்கிழமை) வீரபாண்டியன்பட்டணம் துணை பங்குத்தந்தை வில்லிஜிட் தலைமையில் திருப்பலியும், நற்கருணை ஆசிரும் நடக்கிறது. 3 முதல் 8-வது நாள் வரை அருட்தந்தைகள் வில்லியம், அமல்ராஜ், சில்வெஸ்டர், பனிமயம், பபிஸ்டன், அருமைநாதன் தலைமையில் திருப்பலி நடக்கிறது.

9-வது நாளான 6-ந்தேதி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான ஆரோக்கிய அன்னையின் சப்பர பவனி வீதி உலா நடக்கிறது. அன்றைய தினம் இஞ்ஞாசியார்புரம் பங்குத்தந்தை சேவியர் அருள்ராஜ் தலைமையில் காலை செபமாலை பவனி, புதுநன்மை திருப்பலியும், மாலை திருவிழா மாலை ஆராதனையும் நடக்கிறது. இதில் பொத்தக்காலன்விளை திருத்தல பங்குத்தந்தை வெனி இளங்குமரன் மறையுரை ஆற்றுகிறார்.

10-ம் நாளான 7-ந் தேதி காலை 6 மணிக்கு அருட்தந்தை ததேயுஸ் ராஜன் தலைமையில் கூட்டு திருப்பலியும், மாலை அருட்தந்தை ஜான் சுரேஷ் தலைமையில் நற்கருணை பவனியும் நடக்கிறது. மறையுரை மற்றும் பவனியை தொடர்ந்து இரவு 9.30 மணிக்கு கொடியிறக்கம் நடக்கிறது.

8-ந் தேதி காலை 11 மணிக்கு சூசை அறநிலைய நிதி நிர்வாகி சில்வெஸ்டர் தலைமையில் நன்றி திருப்பலி நடக்கிறது. தொடர்ந்து அசன விருந்து நடக்கிறது.

விழா ஏற்பாடுகளை அடைக்கலாபுரம் பங்குத்தந்தை பீட்டர் பால் மற்றும் ஊர் பொது மக்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News