வழிபாடு

தீர்த்த கிணற்றை பக்தர்கள் புனரமைத்து நீர் இறைத்த போது எடுத்த படம்.

கோனூர்நாடு அகத்தீஸ்வரர் கோவில் தீர்த்த கிணற்றை பக்தர்கள் புனரமைத்தனர்

Published On 2023-01-09 03:39 GMT   |   Update On 2023-01-09 03:39 GMT
  • புனித நீரால் சாமி அம்பாளுக்கு அபிஷேகமும் நடந்தது.
  • சாமி, அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் கோனூர்நாடு கோட்டைத் தெருவில் பிரசித்திப்பெற்ற பெரியநாயகி உடனாகிய அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு விநாயகர், தெட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், முருகன், பிரம்மா, துர்க்கை, சண்டிகேஸ்வரர், காலபைரவர், சூரியன், நவக்கிரகங்களும் தனிசன்னதி கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.அகத்திய மாமுனி வழிப்பட்ட திருத்தலங்களில் இதுவும் ஒன்று. பழமையும், பல்வேறு சிறப்பும் வாய்ந்த இக்கோவில் வளாகத்தில் தீர்த்த கிணறு ஒன்று இருக்கிறது. இதில் இருந்து தீர்த்தம் எடுத்து சாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

ஆனால், கடந்த சில ஆண்டுகளாக கிணறு புனரமைக்கப்படாமல் நீர் மாசுபட்ட நிலையில் இருந்தது. இதனால் கிணற்றில் இருந்து தீர்த்தம் எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதன்காரணமாக சாமி, அம்பாளுக்கு மாற்று நீரில் அபிஷேகம் செய்யப்பட்டு வந்தது.

இதனால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் தீர்த்த கிணற்றின் நிலை அறிந்து மிகுந்த வருத்தத்தை தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் பக்தர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தீர்த்த கிணற்றை புனரமைக்கும் முடிவை எடுத்தனர்.

அதன்படி கோவில் வளாகத்தில் இருந்த தீர்த்த கிணறு பக்தர்களால் சுத்தம் செய்யப்பட்டு புனரமைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ருத்ர யாகம் நடந்தது. இதனையடுத்து திருமுறை பாராயணம் ஓதி சாமி, அம்பாளுக்கு கிணற்றில் இருந்து எடுத்த புனிதநீரால் அபிஷேகம் நடந்தது.

பின்னர், சாமி, அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி கோவிலில் உள்ள பிரகார மூர்த்திகளுக்கும் அபிஷேகம் செய்வதற்காக தீர்த்த கிணற்றில் இருந்து குழாய் அமைக்கப்பட்டது. பழமை வாய்ந்த கோவிலின் தீர்த்த கிணற்றை பக்தர்கள் புனரமைத்து தினசரி அபிசேகத்திற்கு இறைவனுக்கு சமர்பித்துள்ளனர். புனித தீர்த்தத்தில் அபிஷேகம் நடைபெற்றதை கண்டு பக்தர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

Tags:    

Similar News