முருகனுக்கு உகந்த ஆடிக்கிருத்திகையின் சிறப்புகள்
- ஆடி மாதத்தில் இருந்து வரிசையாக அனைத்துக் கடவுளரையும் வேண்டிச் செய்யும் பண்டிகைகளும், விரதங்களும் வருகின்றன.
- அனைத்து முருகன் தலங்களிலும் ஆடிக்கிருத்திகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
வருடத்தில் மூன்று கார்த்திகை தினங்கள் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதன்படி,
* தை மாதம் வரும் தை கிருத்திகை,
* கார்த்திகை மாதம் வரும் பெரிய கிருத்திகை
* ஆடி மாதத்தில் வரும் ஆடிக் கிருத்திகை
இந்த மூன்றும் தமிழ்க்கடவுள் முருகப் பெருமானுக்கு உகந்த நாட்களாகும்.
ஆடி மாதக்கிருத்திகை ஏன் விசேஷம் என்றால் மழைக்காலத் தொடக்கமான தட்சணாயனம் பொதுவாக அனைத்து இறை வழிபாடுகளுக்கும் ஏற்றதாகவும், உத்தராயனம் திருமணம், உபநயனம், கிரஹப் பிரவேசம் போன்ற முக்கிய நிகழ்வுகளுக்கு ஏற்றதாகவும் சொல்லப்படுகிறது.
ஆடி மாதத்தில் இருந்து வரிசையாக அனைத்துக் கடவுளரையும் வேண்டிச் செய்யும் பண்டிகைகளும், விரதங்களும் வருகின்றன. தேவர்களின் மாலைக்காலம் என்று சொல்லப்படும் இந்த மாதத்தில் வழிபாடுகள் அதனாலேயே நடத்தப்படுகிறது.
தைமாதக் கார்த்திகையை விட ஆடிக் கார்த்திகையே சிறப்பாகவும் சொல்லப்படுகிறது. ஆடி மாதத்தில் இருந்து தொடங்கி ஆறுமாதங்கள் கார்த்திகை விரதம் இருந்து தை மாதக் கார்த்திகையில் விரதத்தை முடிக்கலாம்.
ஆடிக்கிருத்திகை தினமான நாளை பெண்கள் விரதம் இருந்து முருகனை வழிபடுவதால் வேண்டிய வரங்கள் கிடைக்கும்.
ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு விரதம் இருக்கும் முருக பக்தர்கள், அன்று புண்ணிய தீர்த்தங்களில் நீராடி, முருகனை வழிபடுவார்கள்.
ஆடிக்கிருத்திகை அன்று பழனியில், பக்தர்கள் சண்முகா நதியில் நீராடி முருகனை வணங்கி, தங்களின் விரதத்தை பூர்த்தி செய்வார்கள்.
இந்நாளில் பக்தர்கள் காவடி எடுத்து தம் பிரார்த்தனைகளை நிறைவேற்றிக் கொள்கிறார்கள். அனைத்து முருகன் தலங்களிலும் ஆடிக்கிருத்திகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
கயிலை நாதனின் நெற்றிக் கண்ணிலிருந்து உதிர்ந்த ஆறு பொறிகள் சரவணப் பொய்கையில் ஆறு குழந்தைகளாக மாற அந்தக் குழந்தைகளை கார்த்திகை பெண்கள் எடுத்து சீராட்டி பாராட்டி வளர்த்தார்கள்.
உலக மக்களின் நன்மைக்காக உதித்த அந்த சரவணனை வளர்த்த கார்த்திகைப் பெண்களையும் சேர்த்து நினைவுகூரும் வகையில் ஆடிக் கிருத்திகை தினத்தன்று முருகனைப் போற்றி பிராத்தனைகள் நிறைவேற்றுவது வழக்கம்.
குறிப்பாக திருத்தணியில் தெப்ப உற்சவம் ஆடிக்கிருத்திகையன்று ஆரம்பிக்கிறது. அரக்கர்களின் செருக்கழித்து முருகன் ஓய்வெடுத்த திருத்தலம் திருத்தணி ஆகும்.
அந்த தினத்தில் இங்கு அரக்கர்கள் வீழ்ச்சிக்கும் மக்கள் மகிழ்ச்சிக்கும் வழிவகுத்துக் கொடுத்த இறைவனை நினைத்து பல்வேறு வழிபாடுகள் நடத்தப்படுகிறது.