வழிபாடு
கரூர் மாரியம்மன்

கருணை வடிவான கரூர் மாரியம்மன்

Published On 2022-05-24 09:05 GMT   |   Update On 2022-05-24 09:05 GMT
மகா மாரியம்மன் என்று மூலவர் அழைக்கப்பட்ட போதிலும் ஏழைகளின் தெய்வமாக இருந்து அருள்பாலிக்கும் அம்மன் கருணையின் வடிவானவளாக இருந்து காட்சி தருகிறார்.
கருவூராக இருந்ததே காலப்போக்கில் கரூராக மருவியது. தமிழகத்தின் தற்போதைய தொழில் நகரங்களில் ஒன்றாக திகழும் கரூர் ஆன்மீகத்திலும் தழைத்தோங்கி உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. அதனை இன்றளவும் தனது பேரருளால் இவ்வுலகிற்கு நிரூபித்து அருள் பாலித்து வருகிறாள் கரூர் மாரியம்மன்.

கரூர் நகரின் மையப்பகுதியில் கோவில் கொண்டுள்ளார் மாரியம்மன். மகா மாரியம்மன் என்று மூலவர் அழைக்கப்பட்ட போதிலும் ஏழைகளின் தெய்வமாக இருந்து அருள்பாலிக்கும் அம்மன் கருணையின் வடிவானவளாக இருந்து காட்சி தருகிறார்.

தல சிறப்பு

அருள்மிகு மாரியம்மன் நான்கு கரங்களுடன் கிழக்கு முகமாக சற்றே ஈசான்ய பார்வையுடன் அமர்ந்த நிலையில் அருள்பாலித்து வருகிறாள். கிராமத்தில் உள்ள ஸ்ரீமாரியம்மன் கோவிலில் இருந்து பிடிமண் எடுத்து வந்து கோவிலில் பரம்பரை அறங்காவலரின் முன்னோர்களால் தற்சமயம் உள்ள இடத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இது சமயபுரம் மாரியம்மனுக்கு அடுத்தாற் போல உள்ள பெரியதொரு பிரார்த்தனை தலமாக விளங்குகிறது.

இக்கோவிலில் விசேஷ அபிஷேக ஆராதனையுடன் கம்பத்துக்கு தயிர் சாதம் படைத்து சாமி கும்பிடுவார்கள். தயிர் சாதம் படையல் என்பது மிக முக்கியமான ஒன்றாகும். இத்திருக்கோயில் சுமார் 100 வருடங்களுக்கு முன்பாகத்தான் தோன்றியது.    

தல பெருமை    

மனிதன் தோன்றுவது அன்னையின் வயிற்றில், மறைவது பூமித்தாயின் வயிற் றில். எப்படித் தோன்றுகி றோமோ அதிலேயே மறைவோம் என்பதே இதில் அடங்கியுள்ள தத்துவம். இதன் உண்மை வடிவமே மாரியம்மன். அந்த வகையில் இந்த ஆலயத்தில் அம்மன் பிரசாதமாக வழங்கப்படுவது திருமண் மட்டுமே.

மஞ்சள் நீர்க் கம்பம் உற்சவத்தின் போது வேப்ப மரத்தின் மூன்று கிளைகளை உடைய ஒரு பகுதியை எடுத்து வந்து, அதில் இருக்கும் பட்டைகளை உரித்து வடிவமைத்து, மஞ்சள் சொருகப்பட்டு, ஆற்றிலிருந்து பூஜை செய்து எடுத்து வரப்பட்டு, ஆலயத்தின் பலி பீடத்தின் அருகில் கம்பம் நடப்படும். இதை சுவாமியாகக் கருதுகிறார்கள். இது மஞ்சள் நீர்க் கம்பம் என்று அழைக்கப்படுகிறது.    
வைகாசிப் பெருந்திருவிழாவின் போது நடக்கும் கம்பம் நடும் விழா மிகவும் சிறப்பானது.
Tags:    

Similar News