வழிபாடு
திருஉத்தரகோசமங்கை கோவில்

திருஉத்தரகோசமங்கை கோவிலில் 275 கருங்கல் தூண்கள் புதுப்பிக்கும் பணி மும்முரம்

Published On 2022-04-21 11:02 IST   |   Update On 2022-04-21 11:02:00 IST
புராதான சிறப்பு வாய்ந்த பழமை வாய்ந்த திருஉத்தரகோசமங்கை திருக்கோவில் கருங்கல் தூண்கள் புதுப்பிக்கப்பட்டு வருவது பக்தர்கள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது.
ராமநாதபுரம் அருகே உள்ளது புகழ்வாய்ந்த திருஉத்தர கோசமங்கை. இந்த ஊரில் மங்களநாதர் மங்களநாயகி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. உலகில் முதலில் தோன்றிய கோவில் என்ற புராதன சிறப்பு வாய்ந்த இந்த கோவிலில் பச்சை மரகதத்திலான ஆடும் திருக்கோலத்தில் அபூர்வ மரகத நடராஜர் சிலை அமைந்துள்ளது.

இந்த கோவிலில் வருடத்தில் ஒருநாள் சிவனுக்கு உகந்த நாளான ஆருத்ரா தரிசனத்தன்று அபூர்வ மரகத நடராஜர் மீது பூசப்பட்டுள்ள சந்தனம் களையப்பட்டு பக்தர்களின் தரிசனத்திற்கு வைக்கப்படும். சிறப்பு வாய்ந்த இந்த கோவில் அதன் பழமை மாறாமல் புதுப்பிக்க ராமநாதபுரம் சமஸ் தானம் தேவஸ்தானம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இதன்படி இந்த கோவில் அம்பாள் சன்னதி மற்றும் நந்தி மண்டபம் பகுதியில் அமைந்துள்ள கல்தூண்கள் அனைத்தும் அதன் பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணி தொடங்கி உள்ளது. இந்த 2 பகுதியிலும் மொத்தம் உள்ள 275 தூண்கள் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. சுண்ணாம்பு, பனங்கருப்பட்டி, ஆற்று மணல், கடுக்காய் போன்ற கலவை மூலம் கல்தூண்கள் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.

திருவாரூரை சேர்ந்த மதியழகன் ஸ்தபதி தலைமையிலான குழுவினர் இந்த பணியில் ஈடுபட்டு உள்ளனர். சுமார் ஒரு வருட காலத்தில் இந்த 275 தூண்களையும் புதுப்பித்து முடிக்க திட்டமிட்டு உள்ளனர். இந்த பணிகளை ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தான திவான பழனிவேல்பாண்டியன் நேரில் ஆய்வு செய்து தேவையான அறிவுரைகளை வழங்கி வருகிறார்.

ராமநாதபுரம் மாவட்டத்தின் புராதான சிறப்பு வாய்ந்த பழமை வாய்ந்த திருஉத்தரகோசமங்கை திருக்கோவில் கருங்கல் தூண்கள் புதுப்பிக்கப்பட்டு வருவது பக்தர்கள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது.

Similar News