வழிபாடு
கள்ளழகர் இன்று அழகர்மலை சென்றார்

கள்ளழகர் இன்று அழகர்மலை சென்றார்: நாளை உற்சவ சாந்தி

Published On 2022-04-20 14:33 IST   |   Update On 2022-04-20 14:33:00 IST
நாளை கள்ளழகருக்கு (21-ந்தேதி) உற்சவ சாந்தி நடத்தப்படுகிறது. அத்துடன் மதுரை சித்திரை திருவிழா முடிவுக்கு வருகிறது.
புகழ்பெற்ற கள்ளழகர் சித்திரை திருவிழா மதுரையில் கடந்த 12-ந்தேதி தொடங்கியது. அழகர் மலையில் இருந்து கள்ளர் திருக்கோலத்தில் புறப்பட்ட சுந்தரராஜ பெருமாள் வழிநெடுக பல்வேறு மண்டகப்படிகளில் எழுந்தருளினார்.

16-ந்தேதி கள்ளழகர் பச்சைபட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கிய வைபவம் நடந்தது. தொடர்ந்து மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார். பக்தர்களுக்கு தசாவதார கோலங்களில் அழகர் அருள்பாலித்தார். அதன்பிறகு பல்வேறு மண்டகப்படி களுக்கும் சென்ற கள்ளழகர் நேற்று பூப்பல்லக்கில் எழுந்தருளி அழகர் மலை நோக்கி புறப்பட்டார்.

வழிநெடுக அவருக்கு பக்தர்கள் கோவிந்த கோ‌ஷத்துடன் வரவேற்பு அளித்தனர். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு பூக்களை தூவி கள்ளழகரை மனமுருகி வணங்கி வழியனுப்பினர். கருப்பண்ண சுவாமி கோவில் சன்னதியில் வையாழி ஆனதை தொடர்ந்து பல்லக்கில் புறப்பட்ட கள்ளழகருக்கு புதூர், மூன்றுமாவடி, சுந்தரராஜன்பட்டி பகுதி மண்டகப்படிகளில் பக்தர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

இன்று அதிகாலை 3 மணிக்கு அப்பன் திருப்பதியில் பக்தர்கள் கள்ளழகரை வரவேற்று தரிசனம் செய்தனர். அதன்பிறகு கள்ளந்திரி வழியாக பக்தர்கள் புடைசூழ அழகர்மலையை சென்றடைந்தார் கள்ளழகர். நாளை (21-ந்தேதி) உற்சவ சாந்தி நடத்தப்படுகிறது. அத்துடன் மதுரை சித்திரை திருவிழா முடிவுக்கு வருகிறது.

Similar News