வழிபாடு
திருமணக்கோலத்தில் பூரணி பொற்கலை அம்மன், சமேத அழகர் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

தென்னம்பாக்கம் அழகுமுத்து அய்யனார் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

Published On 2022-04-19 13:47 IST   |   Update On 2022-04-19 13:47:00 IST
108 நாதஸ்வர, தவில் இசைக்கலைஞர்கள் வாத்திய கருவிகளை இசைக்க உற்சவர் பூரணி பொற்கலை அம்மன் சமேத அழகருக்கு திருக்கல்யாண உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
கடலூர் அருகே உள்ள தென்னம்பாக்கம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பூரணி பொற்கலை அம்மன் சமேத அழகு முத்து அய்யனார் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு பின் பகுதியில் அழகர் சித்தர் கிணற்றில் ஜலசமாதி அடைந்துள்ளார்.

இங்கு ஆண்டுதோறும் சித்திரை மாதம் முதல் திங்கட்கிழமை அன்று சித்திரை திருவிழா மற்றும் திருக்கல்யாண உற்சவம் நடை பெறுவது வழக்கம்.

கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இந்த விழா நடை பெறாமல் இருந்தது. தற்போது கொரோனா தொற்று பரவல் குறைந்ததை அடுத்து இந்த ஆண்டு சித்திரை திருவிழா மற்றும் திருக்கல்யாண உற்சவம் நேற்று நடைபெற்றது.

இதையொட்டி நேற்று முன்தினம் காலை மலட்டாற்றில் இருந்து கரகங்கள் ஊர்வலமாக புறப்பட்டு கோவிலை சுற்றியுள்ள மாரியம்மன் கோவில்களில் சாகை வார்த்தல் உற்சவம் நடைபெற்றது.

தொடர்ந்து அழகு முத்து அய்யனார் மற்றும் அழகர் சித்தர் சன்னதியில் உள்ள பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.



பின்னர் விழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று காலை மலட்டாற்றில் இருந்து காவடியும், பொன்னி அம்மன் ஆலயத்தில் இருந்து கரகமும் ஊர்வலமாக புறப்பட்டு கோவிலை வந்தடைந்ததும் அழகர் சித்தர் பீடத்தில் விசே‌ஷ பூஜைகள் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.

தொடர்ந்து மாலையில் தென்னம்பாக்கம் ஆற்றிலிருந்து அழகர் எழுந்தருளினார். பின்னர் வேடசாத்தான் ஆலயத்திலிருந்து கரகம் புறப்பட்டு கோவிலை வந்தடைந்தது. தொடர்ந்து 108 நாதஸ்வர, தவில் இசைக்கலைஞர்கள் வாத்திய கருவிகளை இசைக்க உற்சவர் பூரணி பொற்கலை அம்மன் சமேத அழகருக்கு திருக்கல்யாண உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

இதில் கடலூர் மட்டுமின்றி விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இரவு சாமி வீதி உலா நடைபெற்றது.

Similar News