வழிபாடு
சிதம்பர விநாயகர், பைரவ மூர்த்தி கோவில் கும்பாபிஷேகம்
கணபதி ஹோமத்துடன் கஜபூஜைகள் மற்றும் முதற் கால யாகசாலை பூஜைகள், பூர்ணாகுதி, தீபாராதனை, இரண்டாம் கால யாக பூஜைகள், மூன்றாம் கால யாக பூஜைகள் நடந்தது.
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் அருகே என்.வைரவன்பட்டியில் சிதம்பர விநாயகர், பைரவ மூர்த்தி கோவில் உள்ளது. இக்கோவிலில் அரிபுரம் யோகி குல பண்டாரத்தார்கள் பாத்திகைக்கு உட்பட்ட நகரத்தார்கள், வைரவன்பட்டி கிராமத்தார்கள் உள்ளிட்டோர் இணைந்து கும்பாபிஷேக பணிகளை செய்து வந்தனர். இக்கோவிலின் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கணபதி ஹோமத்துடன் கஜபூஜைகள் மற்றும் முதற் கால யாகசாலை பூஜைகள், பூர்ணாகுதி, தீபாராதனை, இரண்டாம் கால யாக பூஜைகள், மூன்றாம் கால யாக பூஜைகள் நடந்தது.
நேற்று காலையில் நான்காம் கால யாக பூஜைகள், பூர்ணாகுதி, தீபாராதனையும், காலை 7.30 மணிக்கு மேல் யாகசாலையில் இருந்து கடம் புறப்படாகி புனித நீர் அடங்கிய தீர்த்தக்குடங்கள் கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து காலை 8.15 மணிக்கு மூலவர் விமானத்திற்கு பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில் தலைமை குருக்கள் பிச்சை சிவாச்சாரியார் தலைமையில் கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து மூலஸ்தான அபிஷேகம் நடைபெற்றது. இதில், திருவாடுதுறை ஆதினம், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், காரைக்குடி எம்.எல்.ஏ., மாங்குடி, முன்னாள் எம்.எல்.ஏ., சுப்புராம், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட பொருளாளர் எஸ்.எம்.பழனியப்பன் மற்றும் நகர வைரவன்பட்டி, சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.