வழிபாடு
நாராயண பெருமாள் கோவிலுக்கு வந்த பெருமாள்களை திருமங்கையாழ்வார் வரவேற்ற போது எடுத்த படம்.

11 பெருமாள் கருட சேவை உற்சவம்: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

Published On 2022-02-03 09:26 IST   |   Update On 2022-02-03 09:33:00 IST
நாங்கூர் நாராயண பெருமாள் கோவிலில் 11 பெருமாள் கருட சேவை உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவெண்காடு அருகே நாங்கூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 108 வைணவ திவ்ய தேச பெருமாள் கோவில்களில், 11 பெருமாள் கோவில்கள் ஒரே தொகுப்பாக உள்ளன. ஆண்டுதோறும் இந்த பெருமாள்கள் நாங்கூர் நாராயண பெருமாள் கோவிலில் எழுந்தருளி கருட சேவை உற்சவம் நடைபெறுtவது வழக்கம். நேற்று கருடசேவை உற்சவத்தை முன்னிட்டு, நாங்கூர் நாராயண பெருமாள் கோவிலுக்கு குடமாடு கூத்தர், செம்பொன் அரங்கர், பள்ளிகொண்ட பெருமாள், அண்ணன் பெருமாள், புருஷோத்தம பெருமாள், வரதராஜ பெருமாள், வைகுண்ட நாதர், மாதவப் பெருமாள், பார்த்தசாரதி பெருமாள், காவளம் பாடி கண்ணன் மற்றும் நாராயண பெருமாள் ஆகிய 11 பெருமாள்களும் பக்தர்களால் பல்லக்கில் நாராயண பெருமாள் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டனர்.

கோவிலின் வாயிலில் திருமங்கை ஆழ்வார், பெருமாள்களை வரவேற்றார். பின்னர் அனைத்து பெருமாளுக்கும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து மலர் அலங்காரம் செய்யப்பட்டு, கருட வாகனத்தில் 11 பெருமாள்களும் கோவிலின் பந்தலில் இரவு 10 மணிக்கு எழுந்தருளினர். அப்போது திருமங்கை ஆழ்வார் பாடிய பாடல்களை பட்டாச்சாரியார்கள் பாடினர். மேலும் நாலாயிர திவ்ய பிரபந்தங்களும் பாடப்பட்டன. இதன் முடிவில் நள்ளிரவு மேளதாளம் முழங்கிட 11 பெருமாளுக்கும் ஒரே நேரத்தில் தீபாராதனை காட்டப்பட்டு கருடசேவை உற்சவம் நடந்தது.

திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் ரவி, மாவட்ட கவுன்சிலர் ஆனந்தன், ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி நடராஜன், கிராம பொது நல சங்க தலைவர் அன்பு உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பாதுகாப்பு ஏற்பாடுகளை சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக் தலைமையில் போலீசார் செய்து இருந்தனர்.

Similar News