வழிபாடு
வீரராகவ பெருமாளை சுமார் 2 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்ட பக்தர்கள்

தை அமாவாசை: வீரராகவர் கோவிலில் பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு

Published On 2022-01-31 13:19 IST   |   Update On 2022-01-31 13:19:00 IST
கண்ணாடி மண்டபத்தில் ரத்னாங்கி சேவையில் எழுந்தருளிய உற்சவர் வீரராகவ பெருமாளை சுமார் 2 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் வழிபட்டனர்.
திருவள்ளூரில் உள்ள வைத்திய வீரராகவர் பெருமாள் கோயில் பிரசித்ரிபெற்றது. தை அமாவாசையை முன்னிட்டு தமிழகம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து, ஏராளமான பக்தர்கள் நேற்று இரவு முதலே திருவள்ளூரில் குவிந்தனர்

அவர்கள் தங்க இடமின்றி கோவில் வளாகம், பஸ் நிலையம், மூடிக்கிடக்கும் கடைமுன்பு மற்றும் நடைமேடை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தங்கி இருந்தனர்.

கொரோனா பரவலை முன்னிட்டு ஏற்கனவே கோவில் குளக்கரைக்கு செல்ல பக்தர்களுக்கு தடைவிதிக்கபட்டு உள்ளது. இதனால் இன்று காலை தை அமாவாசையையொட்டி அதிகாலை கோவில் மாட வீதியில் காத்திருந்த புரோகிதர்கள் மூலம் பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

இதேபோல் காக்களூரில் உள்ள பாதாள விநாயகர் கோவில் அருகேயும் ஏராளமான பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர்.

பின்னர் அவர்கள் வீரராகவர் கோவிலுக்கு வழிபட வந்தனர். கண்ணாடி மண்டபத்தில் ரத்னாங்கி சேவையில் எழுந்தருளிய உற்சவர் வீரராகவ பெருமாளை சுமார் 2 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் வழிபட்டனர். இதனால் கோவில் முன்பு பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

கோவிலுக்குள் கூட்டம் அதிகமாக இருந்தால் அரை மணிநேரத்துக்கு ஒரு முறை பக்தர்கள் பிரித்து கோவிலுக்குள் அனுப்பப்பட்டனர். இதனால் கோவிலுக்குள் கூட்ட நெரிசல் தவிர்க்கப்பட்டது.

அதிக அளவு பக்தர்கள் குவிந்ததால் திருவள்ளூர் நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன் தலைமையில் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பாபி மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Similar News