வழிபாடு
கோவை கோனியம்மன் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்த காட்சி.

வழிபாட்டு தலங்களில் பக்தர்களுக்கு அனுமதி

Published On 2022-01-29 03:05 GMT   |   Update On 2022-01-29 03:05 GMT
வழிபாட்டு தலங்களில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் கொரோனா விதியை கடைபிடித்து கலந்து கொண்டு வழிபட்டனர்.
கொரோனா பரவல் அதிகரித்ததை தொடர்ந்து கடந்த 7-ந் தேதி முதல் வார இறுதி நாட்களில் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. அத்துடன் இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டதுடன், ஞாயிறு முழு ஊரடங் கும் அமல்படுத்தப்பட்டது.

இதையடுத்து வார இறுதி நாட்களில் கோவில்கள், ஆலயங்கள், மசூதிகளில் பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. கோவில் கள் முன்பு நின்று பலர் சாமி கும்பிட்டுவிட்டு சென்றனர். இந்த நிலையில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டு உள்ளதுடன், வார இறுதி நாட்களில் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல பக்தர்களுக்கு மீண்டும் அனுமதி அளிக்கப் பட்டது.

இதை தொடர்ந்து கோவை ஈச்சனாரி மற்றும் புலியகுளம் விநாயகர், மருதமலை முருகன், பேரூர் பட்டீஸ்வரர், தண்டு மாரியம்மன், கோனியம்மன் கோவில்களில் நேற்று அதிகாலை முதல் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு கொரோனா விதிகளை கடைபிடித்து மகிழ்ச்சியுடன் சாமி தரிசனம் செய்தனர். அவர்கள் முகக்கவசம் அணிந்ததுடன், சமூக இடைவெளியை கடைபிடித்து நின்றனர்.

இதுகுறித்து இந்து சமய அறநிலையதுறை அதிகாரி ஒருவர் கூறுகையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களும் திறக்கப்பட்டுள்ளன. ஆனாலும் முகக்கவசம் அணிந்து வரும் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப் படுகிறது. எனவே கோவிலுக்கு வரும் பொதுமக்கள் வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும், என்றார்.

இதேபோல் நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் கோவையில் உள்ள மசூதிகளிலும் முஸ்லிம்கள் தொழுகைகளில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News