வழிபாடு
பக்தர்கள் நடமாட்டம் இல்லாமல் ரதவீதி சாலை

ராமேசுவரம் கோவில் ரத வீதி, பிரகாரம் வெறிச்சோடியது

Published On 2022-01-22 05:49 GMT   |   Update On 2022-01-22 05:49 GMT
கோவிலுக்குள் பக்தர்கள் செல்ல விதிக்கப்பட்ட தடை காரணமாக அதிகமான பக்தர்கள் நடமாட்டம் இல்லாமல் ரதவீதி சாலை மற்றும் அக்னி தீர்த்த கடற்கரை பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு முன்எச்சரிக்கை நடவடிக்கையாக வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் வெள்ளிக்கிழமையான நேற்று அரசின் உத்தரவை தொடர்ந்து ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் சாமி தரிசனம் செய்யவும் தீர்த்த கிணறுகளில் பக்தர்கள் புனித நீராடவும் தடை விதிக்கப்பட்டது. இதனால் கோவிலின் சுவாமி மற்றும் அம்பாள் சன்னதி பிரகாரம், 3-ம் பிரகாரம் தீர்த்தக் கிணறுகளில் நீராட செல்லும் பகுதி உள்ளிட்ட அனைத்து இடங்களும் பக்தர்கள் இல்லாமல் வெறிச்சோடியது. அதுபோல் வெளியூர்களில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் கோவில் வாசல் பகுதியில் நின்று தரிசனம் செய்து சென்றனர். கோவிலுக்குள் பக்தர்கள் செல்ல விதிக்கப்பட்ட தடை காரணமாக நேற்று அதிகமான பக்தர்கள் நடமாட்டம் இல்லாமல் ரதவீதி சாலை மற்றும் அக்னி தீர்த்த கடற்கரை பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.

இதேபோல் ராமநாதபுரம் மாவட்டத்தில் திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோவில், திருஉத்தரகோசமங்கை மங்கள நாதர் கோவில், திருவாடானை ஆதிெரத்தினேசுவரர் கோவில், திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோவில் உள்ளிட்ட அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது. இன்றும் நாளையும் இந்த தரிசன தடை அமலில் இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News