வழிபாடு
திருச்செந்தூர் கோவில்

இன்று முதல் 3 நாட்களுக்கு திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை

Published On 2022-01-21 05:51 GMT   |   Update On 2022-01-21 05:51 GMT
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று(வெள்ளிக்கிழமை) முதல் 3 நாட்களுக்கு பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டது.
கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள வழிபாட்டு தலங்களில் வார இறுதி நாட்களான வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடைவிதிக்கப்பட்டது. மேலும், அதிக கூட்டம் கூடுவதை தடுக்கும் விதமாக கடந்த 14-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை நடைபெற்ற தைப்பூச திருவிழா காலங்களிலும் வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்த வகையில் பொங்கல் பண்டிகை மற்றும் தைப்பூச திருவிழாவுக்கு பக்தர்கள் கூட்டத்தை தவிர்க்க, கோவிலில் வழிபாட்டுக்கு தடை விதிக்கப்பட்டது. கோவிலில் தைப்பூச திருவிழா பக்தர்கள் இல்லாமல் எளிமையாக நடந்தது. கோவில் வளாகம் மற்றும் கடற்கரை பகுதிகள் வெறிச்சோடிக்கிடந்தது.

ஆனாலும், பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக திருச்செந்தூரில் குவிந்தனர். பக்தர்கள் கோவில் பகுதிக்கும், கடற்கரைக்கும் செல்லாத வகையில் போலீசார் தடுப்புகளை அமைத்து பாதுக்காப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதையும் மீறி பாதயாத்திரை பக்தர்கள் சாரைசாரையாக திருச்செந்தூரில் குவிந்தனர்.

இதனால் திருச்செந்தூர் நகர் முழுவதும் பக்தர்கள் சலை ஓரங்களிலும், காலியிடங்களிலும் தங்கியிருந்தனர். நேற்றுமுன்தினம் முதல் கோவிலில் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டதால், கோவில் வளாகத்திலும், கடற்கரையிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர். நேற்று மாலை வரை பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

மேலும், வார இறுதி நாட்களான இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 3 நாட்களுக்கு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய மீண்டும் தடை அமலுக்கு வந்துள்ளது.
Tags:    

Similar News