வழிபாடு
தங்க மயில் வாகனத்தில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளி அருள்பாலித்த காட்சி.

தைப்பூச திருவிழா நிறைவை முன்னிட்டு பழனியில் காவடிகளுடன் படையெடுத்த பக்தர்கள்

Published On 2022-01-21 10:11 IST   |   Update On 2022-01-21 10:11:00 IST
பழனியில் தைப்பூச திருவிழா தெப்பத்தேர் உற்சவத்துடன் இன்று நிறைவு பெறுகிறது. இதனை முன்னிட்டு நேற்று காவடிகளுடன் ஏராளமான பக்தர்கள் படையெடுத்தனர்.
உலக புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா நடைபெற்று வருகிறது. கடந்த 12-ந்தேதி உபகோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் கொடியேற்றம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து தினசரி வெள்ளி ஆட்டுக்கிடா, தங்கமயில், தங்கக்குதிரை உள்ளிட்ட வாகனங்களில் முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானை புறப்பாடு நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் 17-ந்தேதியும், சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 18-ந்தேதியும் நடந்தது.

கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு தைப்பூச திருவிழா நிகழ்ச்சிகளில் பக்தர்கள் கலந்துகொள்ள தடை விதிக்கப்பட்டது. அதன்படி திருக்கல்யாணம், தேரோட்டம் உள்ளிட்டவை பக்தர்கள் இன்றி எளிமையாக நடந்தது. எனினும் பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய தமிழகம் முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்தனர். மேலும் காவடி எடுத்தும், அலகு குத்தியும் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

இந்தநிலையில் தைப்பூச திருவிழா தெப்பத்தேர் உற்சவத்துடன் இன்று (வெள்ளிக்கிழமை) நிறைவு பெறுகிறது. மேலும் இன்று முதல் 3 நாட்கள் தரிசன தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் நேற்று பழனி முருகன் கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடிகளுடன் படையெடுத்தனர். குறிப்பாக காரைக்குடி பகுதியை சேர்ந்த பக்தர்கள் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காவடி எடுத்து பழனி வீதிகளில் நடந்து வந்தனர். பின்னர் அவர்கள் திருஆவினன்குடி, மலைக்கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.

முன்னதாக திருவிழாவின் 9-ம் நாளான நேற்று பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருவிழாவின் நிறைவு நாளான இன்று இரவு 11 மணிக்கு பெரியநாயகி அம்மன் கோவிலில் கொடியிறக்கம் நடைபெறுகிறது.

Similar News