வழிபாடு
நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள்.

திருச்செந்தூர் கோவிலில் குவிந்த பாதயாத்திரை பக்தர்கள்

Published On 2022-01-19 12:36 IST   |   Update On 2022-01-19 12:36:00 IST
பல்வேறு பகுதிகளில் இருந்தும் பாதயாத்திரையாக வந்த பக்தர்கள் அதிகாலை முதலே கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் கடந்த 5 நாட்களாக வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

இந்நிலையில் இன்று முதல் பக்தர்கள் கோவில்களுக்கு அனுமதிக்கப்பட்டனர். இதனால் கோவில்களில் கூட்டம் அதிகமாக காணப் பட்டது.

திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலில் நடைபெறக்கூடிய முக்கிய விழாக்களில் ஒன்றான தைப்பூசத் திருவிழா நேற்று பக்தர்களின்றி எளிமையாக நடைபெற்றது.

5 நாட்களுக்கு பிறகு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், தைப்பூசத்தை முன்னிட்டு பல்வேறு பகுதிகளிலும் மாலை அணிந்து விரதம் இருக்கக் கூடிய பக்தர்கள் பாத யாத்திரையாக வந்து காத்திருந்தனர்.

இன்று காலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். அதனைத்தொடர்ந்து விருதுநகர், ராஜபாளையம், தென்காசி, நெல்லை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் பாதயாத்திரையாக வந்த பக்தர்கள் அதிகாலை முதலே கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

சிலர் வேண்டுதல்களை நிறைவேற்றும் விதமாக அங்கப்பிரதட்சணம் செய்தும், அலகு குத்தியும் , காவடி சுமந்தும், சாமி சப்பரம் தூக்கி வந்தும் வேண்டுதல்களை நிறைவேற்றி வருகின்றனர்.

கடந்த 5 நாட்களாக பக்தர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்ட கோவில் வளாகம் மற்றும் கடற்கரை பகுதிகள் பக்தர்கள் கூட்டம் நிரம்பி காணப்படுகிறது.

பக்தர்களின் கூட்டம் அதிகளவில் இருந்து வரும் நிலையில் கட்டண தரிசனம் மற்றும் பொது தரிசன வரிசைகளில் புனித நீராடிய பக்தர்கள் நீண்ட வரிசையில் சுமார் 3 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

Similar News