வழிபாடு
சமயபுரம் மாரியம்மனுக்கு சீர் கொடுக்கப்பட்ட போது எடுத்த படம்.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதரிடம் சீர்பெறும் நிகழ்ச்சி

Published On 2022-01-19 11:48 IST   |   Update On 2022-01-19 11:48:00 IST
ஸ்ரீரங்கம் ரெங்கநாதரிடம் அவரது தங்கையான சமயபுரம் மாரியம்மன் சீர்பெறும் நிகழ்ச்சி கோவில் உள் பிரகாரத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
அம்மன் கோவில்களில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த 9-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் அம்மன் ஒவ்வொரு நாளும் காலையில் பல்லக்கிலும், இரவு பல்வேறு வாகனங்களிலும் எழுந்தருளினார். 9-ம் நாள் திருவிழாவான நேற்று முன்தினம் இரவு கோவில் உள்பிரகாரத்தில் அமைக்கப்பட்ட சிறிய அளவிலான தெப்பத்தில் அம்மன் காட்சி அளித்தார்.

இந்தநிலையில், ஒவ்வொரு ஆண்டும் சமயபுரத்திலிருந்து மாரியம்மன் கொள்ளிடம் ஆற்றங்கரைக்கு சென்று அங்கே தனது அண்ணனான ஸ்ரீரங்கம் ரெங்கநாதரிடம் சீர்பெறும் நிகழ்ச்சி விமரிசையாக நடைபெறும். ஆனால், இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக அம்மன் புறப்பாடு கோவில் உள் பிரகாரத்தில் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக நேற்று காலை 8 மணிக்கு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கண்ணாடி பல்லக்கில் எழுந்தருளி கோவிலின் உள் பிரகாரத்தை வலம் வந்தார்.

அதனைத்தொடர்ந்து மாலை 5 மணிக்கு ஸ்ரீரங்கம் ரெங்கநாதரிடம் அவரது தங்கையான சமயபுரம் மாரியம்மன் சீர்பெறும் நிகழ்ச்சி கோவில் உள் பிரகாரத்தில் நடைபெற்றது. இதனையொட்டி, ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து இணை ஆணையர் மாரிமுத்து தலைமையில் கோவில் பணியாளர்கள் சீர்வரிசை பொருட்களான பட்டுப்புடவை, மாலை, சந்தனம், பழங்கள் உள்ளிட்ட பொருட்களை சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு எடுத்து வந்தனர். அதனை, சமயபுரம் மாரியம்மன் கோவில் இணை ஆணையர் செல்வராஜிடம் வழங்கினர். அதைத்தொடர்ந்து அம்மனுக்கு புடவை சாத்தப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

Similar News