வழிபாடு
எல்லாம் வல்ல சித்தர்

மன்னனுக்கு அருள்புரிந்த எல்லாம் வல்ல சித்தர்

Published On 2021-12-01 08:53 GMT   |   Update On 2021-12-01 08:53 GMT
சிவபெருமான் நடத்திய திருவிளையாடல்கள் பலவும், மதுரையில்தான் நடைபெற்றிருக்கின்றன. அதில் ஈசன், எல்லாம் வல்ல சித்தராக வந்து, கல் யானைக்கு கரும்பு கொடுத்த அதிசயமும் ஒன்று.
மதுரையை அபிஷேக பாண்டியன் என்ற மன்னன் ஆட்சி செய்து கொண்டிருந்த காலகட்டம் அது. அப்போது சோமசுந்தர கடவுள், சித்தரின் வடிவம் எடுத்து மதுரை மாநகர் முழுவதும் வலம் வந்தார். அந்த நேரத்தில் அவர் பல அதிசயங்களையும் நிகழ்த்தினார். கிழவனை குமரன் ஆக்கினார். ஆணை பெண்ணாக மாற்றினார். ஊமையை பேச வைத்தார். ஊசியை நிறுத்தி அதன் மேல் தன்னுடைய பெருவிரலை மட்டும் ஊன்றி நின்று நடனம் ஆடினார்.

இப்படி பல சித்து வேலைகளைச் செய்து மக்களை ஈர்த்தார். இந்தச் செய்தி மன்னனின் காதுக்கும் சென்றது. மன்னன், “அந்த சித்து விளையாட்டுக்காரரை, அரண்மனைக்கு அழைத்து வாருங்கள்” என்று உத்தரவிட்டான்.

ஆனால் சித்தரை சிறைபிடிக்கச் சென்றவர்கள், அவரது சித்து விளையாட்டில் லயத்து போய் அங்கேயே நின்று விட்டனர். இதை அறிந்ததும் மன்னனே தன்னுடைய பரிவாரங்களுடன் சித்தரைத் தேடி வந்தான். இதுபற்றி அறிந்ததும் சித்தர், மீனாட்சி அம்மன் ஆலயத்தின் வாயு மூலையில் அமர்ந்து யோக தியானத்தில் ஆழ்ந்தார். (இந்த இடம் சுந்தரேஸ்வரர் சன்னிதியின் சுற்றுப்பாதையில் துர்க்கை சன்னிதிக்கு அருகே உள்ளது).

மன்னன் அங்கேயும் வந்துவிட்டான். மன்னனோடு வந்த பாதுகாவலர்கள், சித்தரின் யோகத்தை கலைக்க முற்பட்டு, கையை ஓங்கினர். ஓங்கிய நிலையிலேயே அவர்கள் கைகள் நிலைபெற்று விட்டன. இதனால் மன்னன் அதிர்ந்து போனான்.

பின்னர் சித்தரிடம் பணிவாக பேசினான். “ஐயா, தாங்கள் இப்படி அமர்ந்து கொண்டால், உங்களின் தேவை என்ன என்பதை நான் எப்படி அறிவது? மேலும் நீங்கள் சித்தர்தான் என்பதை நான் எப்படி தெரிந்து கொள்வது?” என்றான்.

கண் விழித்த சித்தர், “மன்னா.. நான்தான் ஆதியும் அந்தமும், நான் எங்கும் சஞ்சரிப்பவன், தற்போது இங்குள்ள மக்களுக்கு சித்து விளையாட்டு காட்டி, அவர்களுக்கு தேவையான வரத்தை அளித்து வருகிறேன். என்பெயர் ‘எல்லாம் வல்ல சித்தர்’ என்பதாகும்” என்று கூறினார்.

அதன்பின்னும் சித்தர் மேல் நம்பிக்கையில்லாத மன்னன், “சித்தரே, தாங்கள் எல்லாம் வல்ல சித்தர் என்றால், இந்தக் கரும்பை இங்குள்ள கல் யானையை தின்னச் செய்யுங்கள்” என்று கூறி கரும்பை நீட்டினான்.

சித்தரும் அமைதியாக அருகில் இருந்த கல் யானையைப் பார்க்க, அது உயிர்ப்பெற்று, மன்னனின் கையில் இருந்த கரும்பை வாங்கித் தின்றது. உண்மையை உணர்ந்த மன்னன், அவரை அங்கேயே தங்கியிருக்கும்படி வேண்டினான். மேலும் தனக்கு குழந்தை பாக்கியம் தந்தருள வேண்டும் என்றும் கேட்டான். எல்லாம் வல்ல சித்தரின் அருளால், மன்னனுக்கு ஆண் குழந்தை பிறந்தது.
Tags:    

Similar News