ஆன்மிகம்
உருளை கல்லில் செதுக்கப்பட்டு உள்ள எழுத்துக்களை படத்தில் காணலாம்.

திருவண்ணாமலை மாடவீதியில் முருகர் மரத்தேர் சுமைதாங்கி கல்லில் கல்வெட்டு கண்டெடுப்பு

Published On 2021-11-30 07:47 GMT   |   Update On 2021-11-30 07:47 GMT
திருவண்ணாமலை மாடவீதியில் உள்ள முருகர் மரத்தேர் சுமைதாங்கி கல்லில் 12-ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது.
திருவண்ணாமலை மரபுசார் அமைப்பின் தலைவரும் வரலாற்று ஆய்வாளருமான ராஜ்பன்னீர்செல்வம் தலைமையில் பாலாஜி, சங்கர் மற்றும் உதயராஜா இணைந்து தீபத்திருவிழா நிகழ்வை ஆவணம் செய்தனர்.

அப்போது மாடவீதியில் உள்ள முருகர் மரத்தேர் சுமைதாங்கி கல்லில் எழுத்துக்கள் இருப்பது கண்டறியப்பட்டது. உருளையாக உள்ள அக்கல்லை மேலும் சுத்தம் செய்து பார்த்தபோது அதில் நான்கு வரிகளில் உள்ள கல்வெட்டு தென்பட்டது.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

ஸ்வஸ்தஸ்ரீ நல்லுழரன் விளக்கன் திருச்சிற்றம்பலமுடையான் என்று அக்கல்லில் வெட்டப்பட்டுள்ளது. இக்கல்வெட்டில் வரும் நல்லூர் என்பது ஊரைக் குறிப்பிடுவதோடு திருச்சிற்றம்பலம் என்ற நபர் அக்கல்லைத் தூண் செய்வதற்குக் கொடையாக தந்த தகவல் குறிப்பிடுகிறது.

இக்கல்வெட்டில் வரும் விளக்கன் என்பது அவர் தந்தை பெயராக இருக்கக்கூடும். இக்கல்வெட்டு எழுத்து அமைந்திருப்பதை வைத்து பார்க்கும் போது இதன் காலத்தை கி.பி. 12-ம் நூற்றாண்டாகக் கருதலாம். சோழர்கள் காலத்தில் கோவில் மற்றும் மண்டப தூண்கள் வட்டவடிவில் அமைக்கப்படும். சில கோவில்களில் தூண்களிலும் கல்வெட்டுகள் இடம்பெறுவது வழக்கம். அதுபோல இத்துண்டு கல்லும் ஒரு பெரும் தூணின் உடைந்த பகுதியே ஆகும்.

இதை வைத்துப் பார்க்கும்போது அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள ஒரு தூணோ அல்லது வேறு ஏதேனும் மண்டபத்தைச் சேர்ந்த தூணோ உடைந்து பின்னாளில் தேரை தாங்கும் கல்லாக உபயோகத்திற்கு வந்திருக்கக்கூடும். இந்த உடைந்த தூணில் உள்ள கல்வெட்டு நான்கு வரியே ஆயினும் இக்கல்வெட்டு தனி சிறப்பு வாய்ந்ததாகும். அருணாசலேஸ்வரர் கோவிலில் நூற்றுக்கணக்கான கல்வெட்டுகள் காணப்பட்டாலும் அவை யாவும் மன்னர்களோ அல்லது மன்னர்களின் கீழ் பெரும் வணிகர்களோ மன்னர்களின் மெய்க்கீர்த்தியுடன் தானம் அளித்த தகவலை தருகிறது. ஆனால் இக்கல்வெட்டு சாமானியன் ஒருவன் கோவிலுக்குத் தூண் செய்வதற்குக் கல்லைக் கொடையாக வழங்கிய தகவல் தருகிறது. இதன் மூலம் சாமானியர்களும் அக்காலத்தில் அருணாசலேஸ்வரர் கோவில் திருப்பணிகளில் பங்குபெற்று தங்களால் இயன்றதைச் செய்துள்ள தகவல் அறியமுடிகிறது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News